பஞ்சாபில் ஒரே கட்டத் தேர்தல்.. உத்தரப்பிரதேசத்தில் 3ஆம் கட்டம்.. மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு..!
பஞ்சாபில் மொத்தமுள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகவும், உத்தரப் பிரதேசத்தில் மூன்றாம் கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் 59 தொகுதிகளுக்கும் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பஞ்சாபில் மொத்தமுள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஆம் ஆத்மிக் கட்சியில் முதலமைச்சர் வேட்பாளரான பக்வந்த் மான் மொகாலியில் உள்ள குருத்துவாராவில் வழிபட்டுவிட்டு அங்குள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
ஒட்டிப் பிறந்த இரட்டையர்களான சோனா, மோனா ஆகியோருக்குத் தனித்தனியாக வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. முதன்முறை வாக்காளரான அவர்கள் அமிர்தசரசில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை வாக்குப்பதிவு அலுவலர்கள் செய்திருந்தனர்.
காங்கிரசைச் சேர்ந்த மணீஷ் திவாரி லூதியானாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். காங்கிரஸ் வேட்பாளரும் நடிகர் சோனு சூட்டின் சகோதரியுமான மாளவிகா சூட் மோகாவில் உள்ள பள்ளியில் வாக்களித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் மூன்றாம் கட்டமாக இன்று 16 மாவட்டங்களில் உள்ள 59 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்றைய தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சிங் பாகல் ஆகியோரின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. காங்கிரசைச் சேர்ந்த சல்மான் குர்சித், அவர் மனைவியும் வேட்பாளருமான லூயிஸ் ஆகியோர் பரூக்காபாத் சாதர் தொகுதியில் வாக்களித்தனர்.
Comments