நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு
தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. மக்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ள 12 ஆயிரத்து 838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
மொத்தமுள்ள 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்திலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தேர்தல் பணியில் ஒரு இலட்சத்து 33 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறையினர், ஊர்காவல் படையினர், முன்னாள் இராணுவத்தினர் என மொத்தம் ஒரு இலட்சத்து 13 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றமானவை எனக் கண்டறியப்பட்ட 5 ஆயிரத்து 920 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுத் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படுகிறது.
பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்கு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்ட நிலையில் உடனடியாகக் கோளாறு சரிசெய்யப்பட்டும், மாற்று எந்திரங்கள் கொண்டு வரப்பட்டும் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், மாநிலத் தேர்தல் ஆணையத்தில் இருந்தும் நேரடியாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்தார்.
Comments