அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை.. மருத்துவர்களுக்கு உதவ ரோபோடிக் கருவி.!
நாட்டில் முதன் முறையாக மாநில அரசின் மருத்துவமனையில் அதிநவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அறுவை சிகிச்சை அரங்கு குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
இந்தியாவில் குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளிலும், மத்திய அரசின் ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் மட்டுமே செயல்பட்டு வரும் இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பம் முதல் முதலாக தமிழக அரசின் சார்பில் செயல்படும் மருத்துவமனை ஒன்றில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த அதி நவீன அறுவை சிகிச்சை அரங்கம் விரைவில் முதலமைச்சரால் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த ரோபோடிக் கருவியில் உள்ள நான்கு கரங்கள் அறுவை சிகிச்சையினை துல்லியமாகவும், நுட்பமாகவும் மேற்கொள்ளும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மருத்துவர்கள் வேறு ஒரு இடத்தில் இருந்தே ரோபோடிக் கருவியினை இயக்கி அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ரோபோடிக் இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராவின் உதவியுடன் நோயாளியின் பாதிக்கப்பட்ட உடல் பாகங்களை சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் வேறொரு இடத்தில் இருந்து தெளிவாக காணவும், அவர்கள் இயக்குவதற்கு ஏற்ப சம்பந்தப்பட்ட இடத்தில் கருவிகள், அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
புற்றுநோயியல், சிறுநீரக அறுவை சிகிச்சை, நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை, இருதய அறுவை, கை சீரமைப்பு, ரத்த நாள அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிக்கலான அறுவை சிகிச்சைகளை கூட எளிதாக மேற்கொள்ளும் வகையில் இந்த ரோபோடிக் கருவிகளின் செயல்பாடு இருக்கும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த அதி நவீன ரோபோடிக் கருவியை இயக்குவதற்கு 6 மருத்துவர்கள் தனிப்பயிற்சி பெற்றிருப்பதாக ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 4 ஆயிரம் வரையிலான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த ரோபோட்டிக் கருவிகள், மருத்துவர்களுக்கு பெரிதும் பயன்படும் என துறை வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Comments