தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. இதையொட்டி ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், கடம்பூர் தவிர்த்து 489 பேரூராட்சி அமைப்புகளில் உள்ள 12 ஆயிரத்து 838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த 6 வேட்பாளர்கள் உயிரிழந்தனர். கானாடுகாத்தான் பேரூராட்சியில் யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் மின்னணு இயந்திரம் மூலமே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுக்குத் தயார் நிலையில் உள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் என தேர்தல் பணியில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவிடாமல் நடக்கிறது. 2 கோடியே 83 லட்சம் பேர் இன்றைய தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வார்கள்.
கொரோனா பரவலை தடுக்க வாக்குச்சாவடிகளில் வெப்பமானி, கிருமிநாசினி, முகக்கவசம், கையுறைகள், பாதுகாப்பு கவசம், பஞ்சு உள்ளிட்டவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. கொரோனா பாசிடிவ் சான்றிதழுடன் வருபவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
போலீசார், முன்னாள் ராணுவத்தினர், அதிவிரைவுப் படையினர் என ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சி.சி.டி.வி.. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
5 ஆயிரத்து 960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாக கண்டறியபட்டு, வெப் ஸ்ட்ரீமிங் மூலம் தலைமை அலுவலகத்தில் 30 பேர் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
Comments