நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : நாளை வாக்குப்பதிவு

0 2667

மிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் களத்தில் மொத்தமாக 57ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நாளை காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவும், 7 மணிக்கு வாக்குப்பதிவும் நடைபெறும். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடைசி ஒரு மணி நேரம் கொரோனா பாதித்தோர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் மொத்தமாக 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. நாளை நடைபெறும் தேர்தலில் 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த மின்னணு எந்திரங்கள் அனைத்தும் எஸ்.ஐ. தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் அதிகாரிகள் மேற்பார்வையில் வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டன. மேலும், வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களும் அந்தந்த மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

மாநிலம் முழுவதும் 3,678 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று, சென்னையில் மட்டும் 1,100 இடங்கள் பதற்றமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிக்கும் வகையில் 846 அதிரடி படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

வெளியிடங்களில் இருந்து வார்டுகளுக்கு சம்பந்தமில்லாத நபர்கள் ஊடுருவுவதை தடுக்கவும், ஆயுதங்கள் மதுபான கடத்தலை தடுப்பதற்கும் சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 455 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் நாளைய தினம் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். போலீசாருடன் இணைந்து நாளை 1 லட்சத்து 40 ஆயிரம் அலுவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments