தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. 20-ந் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும். மேலும், 21-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், 22-ந் தேதி தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரையில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments