தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு.!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் கடம்பூர் தவிர்த்து 489 பேரூராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து வாக்குப்பதிவுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. வாக்குப்பதிவுக்காக 31,029 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று பரவலை தடுக்க வாக்குச்சாவடிகளில் வெப்பமானி, கிருமிநாசினி, முககவசம், கையுறைகள், பாதுகாப்பு கவசம், பஞ்சு போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பணியில் 1 லட்சத்து 33 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள். ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றன. இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சி.சி.டி.வி.. கேமரா பொருத்தப்பட்டுள்ளன.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவுக்காக தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Comments