நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு..!
தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடையும் நிலையில், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்..
திண்டுக்கல் மாநகராட்சியின் 2வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரை ஆதரித்து பிரபல பாடகர்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஆகியோர் மக்களிடையே பாட்டு பாடி வாக்கு சேகரித்தனர்.
சென்னை மாநகராட்சியின் திரு.வி.க நகர் மண்டலத்திற்கு உட்பட்ட 75 மற்றும் 76 வது வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஆட்டுக்குட்டியை தோளில் சுமந்து நடந்து சென்று மக்களிடையே வாக்கு சேகரித்தார்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து குரங்குசாவடி பகுதியில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார். கடை கடையாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி அவர் வாக்கு சேகரித்தார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். சென்னை மணலி சீனிவாச பெருமாள் கோவில் தெருவில் 18,19, 20, 21, 22 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக திறந்த வேனில் நின்றபடி அவர் மக்களிடையே ஆதரவு திரட்டினார்.
தேனி மாவட்டம் போடியில் 15வது வார்டில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் இளம் வேட்பாளர், வீடு வீடாக சென்று மக்களிடையே ஆதரவு திரட்டினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேரூராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து ஊர்வலமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து CPI மாநில செயலாளர் முத்தரசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 141வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர், ஃபாஸ்ட் புட் கடையில் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் தயாரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 23வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடும் பெண் வேட்பாளர், வீடு வீடாக சென்று சோலை மரக்கன்றுகளை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சி 3வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர், பேண்டு வாத்தியங்கள் முழங்க எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வேடமணிந்த ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 163வது வார்டில் போட்டியிடும் திமுக பெண் வேட்பாளர், தனிநபராக வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.
மதுரை மாநகராட்சியின் 3வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர், கட்டுமான தொழிலாளர்களுடன் இணைந்து கட்டிட வேலை செய்து வாக்கு சேகரித்தார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 160வது வார்டில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர், சைக்கிளில் தனிநபராக வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வது வார்டில் போட்டியிடும் திமுக பெண் வேட்பாளர் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவருக்கு ஆதரவாக திமுக தொண்டர்கள் மக்கள் மத்தியில் நடனமாடி வாக்கு சேகரித்தனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை 35வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர், மீன் விற்பனை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..
மதுரை மாநகராட்சியின் 88வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளருக்கு ஆதரவாக, நடிகர் விஜய் போல தோற்றம் கொண்ட நபர் ஓடும் பேருந்தில் ஏறி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சி 9வது வார்டில் சுயேட்சையாகப் போட்டியிடும் முல்லை கே.பலராமன் என்பவர், திருமுல்லைவாயல் காலனி பகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்தார். தனது ஆதரவாளர்களுடன் வீதி வீதியாகவும் வீடு வீடாகவும் சென்று தீப்பெட்டி சின்னத்தில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக மக்களவை உறுப்பினர் கனிமொழி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி மற்றும் நங்கவரம், மருதூர் பேரூராட்சிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் திமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி ஆதரவு திரட்டினார்.
ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சரும் தற்போதைய பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே சி கருப்பணன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவொற்றியூரில் 10வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, புலி வேடமிட்டு மேளதாளத்துடன் திமுக தொண்டர் ஒருவர் அவருக்கு ஆதரவு திரட்டினார்.
அதேப்போல், சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை 39 வது வார்டில் போட்டியிடும் அதிமுக பெண் வேட்பாளருக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வேடமணிந்து வந்தவர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
வேலூர் மாநகராட்சியின் 5வது வார்டில் களம் காணும் அதிமுக வேட்பாளர் ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சென்னை பெரம்பூர் 71வது வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் ஆசிரியை வாக்காளர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 143 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர், காய்கறி விற்பனை செய்தும், மக்கள் கவனத்தை ஈர்க்கும் விதமாக கொசு வலையில் அமர்ந்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 129 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் கலை கலாச்சார பிரிவு மாநில தலைவி காயத்ரி ரகுராம் சைக்கிளில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருச்சியின் 51-வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏழைப் பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்து சீர்வரிசை வழங்கினார். அப்பெண்ணிற்கு அவர் புடவை, வேஷ்டி, சில்வர் பாத்திரம், ரொக்கம் உள்ளிட்ட சீர்வரிசைகளை வழங்கினார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுக பெண் வேட்பாளர் ஆதரவாளர்களுடன் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நகராட்சி 29ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் அலமேலு, கணவருடன் இணைந்து 50க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் சகிதமாக வாக்கு சேகரித்தார்.
Comments