படைகளை விலக்குகிறது ரஷ்யா... தணியுமா போர் பதற்றம்?....

0 4398

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், உக்ரைன் எல்லையில் ஒரு சில இடங்களில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா அந்நாட்டின் எல்லையில் வீரர்கள், ஆயுதங்களை குவித்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா, நேட்டோ அமைப்பின் உறுப்பினர் நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை போர் விமானங்கள், கப்பல்கள், படைகளை அனுப்பி வருகின்றன. இதனைத் தொடர்ந்து உக்ரைன் எல்லையையொட்டிய பெலாரஸ் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் துருப்புகளை குவித்த ரஷியா, போர் பயிற்சியில் இறங்கி இருப்பதால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில், ரஷ்யா தங்கள் நாட்டின் மீது நாளை தாக்குதல் நடத்தக்கூடும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இச்சூழலில், ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட 10 நாடுகள் தங்கள் மக்களை உக்ரைனில் இருந்து வெளியேற்ற துவங்கி உள்ளனர். மேலும், உக்ரைனில் தங்கி இருக்க வேண்டிய கட்டாயம் இல்லாத மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற அங்குள்ள இந்திய தூதரகமும் அறிவுறுத்தி உள்ளது.

இந்தியர்கள் யாரும் அவசியமின்றி உக்ரைனுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ள தூதரகம், இந்தியர்கள் தங்கள் இருப்பிடம் பற்றி தகவல் அளிக்க அறிவுறுத்தி உள்ளது. உக்ரைனில் இந்திய மாணவர்கள் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் காரணமாக கடந்த திங்கட்கிழமையன்று சர்வதேச அளவில் தங்கம் மற்றும் கச்சா எண்ணையின் விலை கிடுகிடுவென உயர்ந்தன. குறிப்பாக, 7 ஆண்டுகளில் இல்லாத அளவாக பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றிற்கு 96 டாலர்கள் என்ற அளவில் உயர்ந்தது.

இந்நிலையில், உக்ரைன் எல்லையில் ஒரு சில இடங்களில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அந்நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு ராணுவப் பிரிவுகளைச் சேர்ந்த படையினர் திரும்புவதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் நிலவரம் தொடர்பாக ஜெர்மனி பிரதமர் ஓலப் ஷோல்சுடன் ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தை நடத்தவிருந்த நிலையில், படைகள் திரும்புவது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதனிடையே, தாங்கள் ஒருபோதும் போரை விரும்பவில்லை என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். ஜெர்மனி பிரதமர் ஓலப் ஷோல்சுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேற்கத்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது என்றார்.

மேலும், ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான வரம்புகள், போர் பயிற்சிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பிற நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவும் தயார் என புதின் கூறியுள்ளார். அதேபோல், ரஷ்யாவின் முக்கிய கோரிக்கைகளுக்கு மேற்கத்திய நாடுகள் செவிசாய்க்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments