டாக்டர் தம்பதியை கட்டிப்போட்டு கொள்ளை.. நகை, பணத்தோடு காரையும் அபேஸ் செய்த கும்பல்..!

0 2447
டாக்டர் தம்பதியை கட்டிப்போட்டு கொள்ளை.. நகை, பணத்தோடு காரையும் அபேஸ் செய்த கும்பல்..!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், வீடு புகுந்து டாக்டர் தம்பதியை கட்டிப்போட்டு 280சவரன் நகை, 25லட்சம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள், போகும் போது மருத்துவரின் இன்னோவா காரிலேயே தப்பிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் மருத்துவமனை வைத்து நடத்தி வருபவர் சக்திவேல். இவரது மனைவி ராணி. கணவன், மனைவி என இருவரும் மருத்துவர்கள் ஆவர். சக்திவேலுடன் அவரது தந்தை சென்னியப்பன், தாய் தேவநாயகம் ஆகியோரும் வசித்து வருகின்றனர்.

நேற்றிரவு மருத்துவமனையில் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சக்திவேல் - ராணி தம்பதி வழக்கம்போல், உறங்க சென்றனர். சக்திவேலின் தந்தை வாசலுக்கு முன் வளாகத்தில் கட்டிலில் படுத்துறங்கியுள்ளார். நள்ளிரவில், கையுறை, மாஸ்க் அணிந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் காம்பவுண்டு சுவர் ஏறிக்குதித்து வீட்டுக்குள் புகுந்த நிலையில், வெளியில் படுத்திருந்த சென்னியப்பனை மிரட்டி, கட்டிப்போட்டுள்ளனர்.

பின்னர், கையில் கொண்டு வந்த இரும்பு ராடை வைத்து கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், சக்திவேல், அவரது மனைவி, தாய் என மூன்று பேரையும் கட்டிப்போட்டனர். பின்னர், ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்து, அங்கிருந்த 280 சவரன் நகை, 25 லட்ச ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். தப்பிச் செல்லும் போது, வீட்டுக்கு முன் நின்றிருந்த இன்னோவா காரையும் எடுத்துச் சென்றனர். இதனிடையே வெகுநேரமாக போராடி, கை கட்டுகளை அவிழ்த்த சக்திவேல், போலீசாருக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், டாக்டர் குடும்பத்தினரிடம் கொள்ளை நடந்த விதம் குறித்து கேட்டறிந்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கைரேகை தடயவியல் நிபுணர்கள் வந்து கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர்.

கொள்ளை நடந்த பங்களா தனியாக, அக்கம் பக்கத்தில் யாரும் வசிக்காத பகுதியில் உள்ளது. இதனை நன்கு நோட்டமிட்டே கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் டாக்டர் சக்திவேல் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் உடைந்து பழுதாகிவிட்ட நிலையில், அதனை மாற்றவும் இல்லை.

இதனையும் நன்கு அறிந்த கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளதாகவும், மருத்துவருக்கு நெருக்கமானவர்கள் அல்லது அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்பவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து 2 ஏ.டி.எஸ்.பி. தலைமையில் 13 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments