அடிமை போல நடத்துகிறார்.. ஊராட்சி மன்றத் தலைவி கண்ணீர்.. ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டு.!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே, ஊராட்சி மன்றச் செயலாளர் தன்னை அடிமைப்போல நடத்துவதாகக் கூறி கண்ணீர் வடித்த மணியாச்சி பெண் ஊராட்சித் தலைவர், தனது அலுவலகத்தைப் பூட்டி சாவியை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மணியாச்சி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பிரேமா முருகன், இதே ஊராட்சியில் செயலாளராக பணியாற்றி வருபவர் செந்தூர்பாண்டி. கடந்த 2 ஆண்டுகளாக ஊராட்சி மன்றப் பணிகளை மேற்கொள்ளும் தலைவருக்கு, செந்தூர்பாண்டி முறையான ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஊராட்சியில் பல்வேறு பணிகள் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், முடிந்த பணிகளுக்குக் கூட சரிவர பில்கள் போட்டு கொடுக்கவில்லை என்பதால், புதிய பணிகளுக்கு போதுமான நிதி பெற முடியாத சூழ்நிலை இருப்பதாகவும், துணைத் தலைவரை கையில் வைத்துக் கொண்டு ஊராட்சிச் செயலாளர் செந்தூர்பாண்டி பணிகளை சரிவர செய்யமால் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டிய ஊராட்சித் தலைவர் பிரேமா முருகன், தன்னை கடையில் போய் டீ வாங்கி வரச்சொல்லி அடிமையைப்போல நடத்தி அவமானப்படுத்தியதாகவும், இதனால் கடும் மன உளைச்சல் அடைந்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.
இதையடுத்து ஊராட்சி செயலாளர் தன்னை, பணி செய்ய விடாமல் தடுத்து வருவதால் மனமுடைந்ததாக கூறி, ஊராட்சி மன்றத் தலைவர் பிரேமா முருகன் ஊராட்சி மன்ற அலுவலகத்தினை பூட்டி அதற்கான சாவியை ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைத்தார். அப்போது தனக்கு நேர்ந்த அவமானங்களை விவரித்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்
மக்கள் பணியை சரிவரச் செய்யாமல் மணியாச்சி ஊராட்சி வளர்ச்சி பணிக்கு இடையூறாக இருந்துவரும் ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்யும் வரை அலுவலகத்தினைத் திறக்க முடியாது என்றும், அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி ஊராட்சி செயலாளரை உடனடியாக மாற்ற வேண்டும், பெண் என்றும் அவதூறு பேசும் ஊராட்சி செயலாளர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரேமா கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரணை நடத்தி வருகின்றார்.
Comments