ஆதலினால் காதல் செய்வீர்.!
பிப்ரவரி 14ம் தேதியை உலகம் முழுவதும் பல நாடுகள் வாலண்டைன்ஸ் டே என்று காதலர் தினமாகக் கொண்டாடி வருகிறது. இந்த நாளைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு.....
காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம், கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம், ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே... என்றார் மகாகவி பாரதி.
உலகம் அன்பால் ஆனது; அன்பை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதன் மூலமாகவே அது பரவுகிறது; மனிதர்களை இதயங்களை இணைக்கிறது.இளம் பருவத்து காதல், காணாமல் காதல், முதிர்ந்த வயதின் காதல்.... இப்படி ஏதோ ஒரு வகையில் காதல் வயப்படுகின்றனர்.
காதலர்கள் மீது விமர்சனங்கள் இருந்தாலும், உண்மையான காதலை யாரும் வெறுப்பதில்லை. திருமணமானவர்கள் தங்கள் மனைவி அல்லது கணவரைக் காதலித்தால்தான் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் இருக்கும்.
இளமைக் காதலைவிட பல்லாண்டுகளாக சேர்ந்து வாழும் முதியோரிடையே இருக்கும் காதல் நெகிழ்ச்சிக்கு உரியது.
காதல் ஒருபுறம் மகிழ்ச்சியைத் தரும் புத்துணர்வாக இருப்பினும், இழந்த காதலும் பிரிந்த உள்ளங்களும் தாளாத துயருடன் தவிக்கத்தான் செய்கின்றன.
யாரைக் கேட்டும் மலர்கள் மலர்வதில்லை என்பது போல் காதலும் தானாகவே மலர்ந்து விடுகிறது எனினும், எது உண்மையான காதல் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. காதல் உணர்வுகள் நிரந்தரமானவை அல்ல... சமூகத்தின் யதார்த்தம் பல நேரங்களில் காதலை மிஞ்சி விடுகிறது... இதுவே அனுபவம் மிக்க பெற்றோரின் கருத்தாக உள்ளது.
Comments