நெருங்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. சூடுபிடிக்கும் பிரச்சாரம்..! வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டை..!

0 1980

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களும் வாக்காளர்களைக் கவர பல்வேறு யுத்திகளை கையாண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மேளதாளங்கள் முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் சென்று அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திறந்தவெளி வாகனத்தில் சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் இறகுப்பந்து விளையாடி வாக்கு சேகரித்தார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பறை இசை முழங்க வீதி வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டதோடு, மரச்செக்கு எண்ணெய் ஆட்டிக் கொடுத்தும் டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்தும் வாக்கு சேகரித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியின் 22வது வார்டில் போட்டியிடும் திமுக பெண் வேட்பாளருக்காக அவரது மருமகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சியின் 14வது வார்டில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளரை ஆதரித்து நடிகையும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை மண்டலத்தின் 37ஆவது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இறைச்சிக் கடையில் இறைச்சி வெட்டி கொடுத்து வாக்கு சேகரித்தார்.

கோவை மாநகராட்சியின் 69வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளார்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, துணிகளுக்கு இஸ்திரி போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியின் 16வது வார்டில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர், தேர்தலில் வெற்றி பெற்ற பின், தாம் கடமையை செய்யத் தவறினாலோ, ஊழல் செய்தாலோ பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்ற உறுதிமொழிக் கடிதத்தை வீடு தோறும் வழங்கி வாக்கு சேகரித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 150 மற்றும் 153 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் எம்.பி டி.ஆர் பாலு போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, கலைஞர் கருணாநிதியுடனான தனது நினைவலைகளை அவர் பகிர்ந்துக் கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள கருங்குழி பேரூராட்சி 3வது வார்டில் பாமக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் வீதி வீதியாக, வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments