வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் "சிறந்த புலனாய்வு அதிகாரி" என்ற மத்திய அரசின் விருது பெற்ற காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கண்மணியும் நீதித் துறை குற்றவியல் பிரிவு உதவி இயக்குனராக பணியாற்றி வரும் அவரது கணவர் சேவியர் பாண்டியனும் கீழ ராமன்புதூர் பகுதியில் வசித்து வருகின்றனர்.
கண்மணி கடந்த 2001ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் சிறந்த புலனாய்வு அதிகாரி என்ற விருதைப் பெற்றவர். இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
அதனடிப்படையில், தம்பதி வீட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கையூட்டு ஒழிப்பு காவல்துறை அதிகாரிகள், சுமார் 7 லட்ச ரூபாய் பணத்தையும் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றிச் சென்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Comments