காங்கிரசுக்கு கடும் கண்டனம்.. நாடாளுமன்றத்தில் மோடி உரை..!
ராணுவ தளவாட உற்பத்தி வளாகங்களை தமிழகம் மற்றும் உத்தரபிரதேசத்தில் அமைக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள பிரதமர் மோடி, சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் திட்டத்தால் நாடு தன்னிறைவு பெறும் என குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் நிலையில், அதற்கு பதிலளித்து மக்களவையில் நேற்று பேசிய பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் உரையாற்றியுள்ளார். கொரோனா சூழலில் நமது சுகாதாரத்துறை மற்றும் முன்கள பணியாளர்கள் ஆற்றிய பணியை இந்த அவை பாராட்டுவதாக குறிப்பிட்ட பிரதமர், பெருந்தொற்று காலத்தில் உலகிற்கே எடுத்துக்காட்டாக திகழும் வகையில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
ராணுவ தளவாட உற்பத்தி வளாகங்களை தமிழகம் மற்றும் உத்தரபிரதேசத்தில் அமைக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அதிகம் ஊக்குவிக்கப்படுவதால் நாடு தன்னிறைவு பெறும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
நாட்டை முன்னேற்றுவதில் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சில தலைவர்கள் தங்களுடைய தொகுதியை கூட கவனிப்பதில்லை என்றும் எதிர்க்கட்சியினரை பிரதமர் மோடி விமர்சித்தார். மேலும், ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் நமது நாட்டை தரம் தாழ்த்தி விமர்சிக்கக்கூடாது என கூறிய பிரதமர், வாரிசு அரசியலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றும் வாரிசு அரசியலால் திறமை புறக்கணிக்கப்படுகிறது என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் இல்லையென்றால் நாட்டில் நெருக்கடி நிலை, ஊழல் போன்றவை இருந்திருக்காது என பிரதமர் மோடி விமர்சித்தார். தற்போது மாநில உரிமை குறித்துப் பேசும் காங்கிரஸ் கட்சிதான் பல மாநில முதலமைச்சர்களை பதவியிலிருந்து நீக்கியது என்றும் தான் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த காலத்திலும், காங்கிரஸ் தொடர்ந்து நெருக்கடிகளைக் கொடுத்துவந்ததாகவும் பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Comments