'நீட் விலக்கு மசோதா சட்டப்பூர்வமானது' சிறப்பு கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு

0 1515

ள்மாறாட்டம், விடைத்தாளில் திருத்தம் என அனைத்து வித முறைகேடுகளும் நீட் தேர்வில் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வரை, தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டம் ஓயாது என தெரிவித்தார்.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய முதலமைச்சர், நீட் தேர்வு ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவுக்கு தடுப்புச் சுவராகவும், தனியார் பயிற்சி மையங்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்டவும், கல்வி உரிமையை மீட்டெடுக்க சிறப்பு கூட்டம் கூடியதாக குறிப்பிட்ட முதலமைச்சர், நீட் தேர்வுக்கு முன் 90% இடங்களை மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் பெற்றுவந்ததாகவும் தற்போது அந்நிலை மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வை ரத்து செய்ய இயற்றப்பட்ட சட்டத்தைப் பின்பற்றியே, நீட் தேர்விலிருந்து விலக்கு கோருவதாகவும், நீட் தேர்விலிருந்து உறுதியாக விலக்கு பெறப்படும் என்றும் சிறப்பு அமர்வில், முதலமைச்சர் கூறினார்.

நீட் தேர்வு என்பது அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட தேர்வு இல்லை, அது இந்திய மருத்துவ கவுன்சில் உருவாக்கிய தேர்வு என விளக்கமளித்த அவர், நீட் தேர்வு முறை சிலரை கல்லறைக்கும், சிலரை சிறைச்சாலைக்கும் அனுப்பியது என குற்றஞ்சாட்டினார்.

நீட் தேர்வு ரத்து தீர்ப்பை தள்ளுபடி செய்து, 2016ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, அத்தேர்வுக்கான பாஜக அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

சட்டமன்ற தீர்மானத்தை ஆளுநரால் நிறுத்தி வைக்க முடியும் என்றால் இந்திய மாநிலங்களின் கதி என்ன ? என கேள்வி எழுப்பிய அவர், மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது சட்டமன்ற இறையாண்மையை கேள்விக்குறியாக்கி உள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தோடு முரண்படும் சட்டத்தை சட்டமன்றம் இயற்றினால், ஜனாதிபதிக்கு மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும் என்றும் ஆளுநர் என்பவர் அமைச்சரவைக்கு கட்டுப்பட்டே நடந்து கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments