நீட் விலக்கு மசோதா பேரவையில் மீண்டும் நிறைவேற்றம்
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்டமசோதா, பேரவையில் ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்டது. நீட் விலக்கு மசோதாவுக்கு திமுக, அதிமுக உட்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பாஜக வெளிநடப்பு செய்துள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை, ஆளுநர் அரசுக்கே திருப்பி அனுப்பினார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று கூடியது.
பேரவை கூடியதும் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரண, காரணிகளை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
தொடர்ந்து, நீட் விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து பேசிய அவர், நீட் விலக்கு மசோதா குறித்த ஆளுநரின் மதிப்பீடு அனைத்தும் தவறானது எனவும், நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டு திருப்பி அனுப்பியது அரசியலமைப்பு சட்டப்படி சரியானது அல்ல எனவும் கூறினார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க பரிந்துரை வழங்க அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பல தரப்பினரின் கருத்துக்களை கேட்டு, சட்டநுட்பங்களை ஆய்வு செய்துதான் அறிக்கை அளித்தது எனவும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, நீட் விலக்கு மசோதாவுக்கு, அதிமுக, பா.ம.க., காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, மமக, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் நீட் விலக்கு மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக கூறி பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இதனிடையே மாலை 5.30 மணி அளவில் மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைத்ததாகவும், ஆளுநர் மாளிகையில் மசோதா வழங்கப்பட்டதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
Comments