கூகுள் பே யில் ரூ 5000.. கார் களவாணியிடம் பேரம்.. காவல் ஆய்வாளர் ஆடியோ..! திருட்டு வழக்கு மோசடி வழக்கான கூத்து
கார் திருட்டு வழக்கில் தொடர்புடைய பா.ஜ.க மாவட்ட செயலாளாரை கைது செய்யாமல் இருக்க தவணை முறையில் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் கூகுள் பே மூலம் பணம் கேட்டுப்பெறும் ஆடியோ வெளியான நிலையில் துணை ஆணையர் கேட்டுக் கொண்டதால் கார் திருடனை கைது செய்யாமல் விட்டதாக பெண் காவல் ஆய்வாளர் விளக்கம் அளித்துள்ளார். திருட்டு வழக்கு , மோசடி வழக்காக மாற்றப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
சென்னை மாதவரத்தை சேர்ந்த பில்டர் ராஜேந்திரன் என்பவரிடம் தமிழ்ச்செல்வன் என்பவர் ஓட்டுனராக வேலைபார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜேந்திரனின் இன்னோவா கார் களவு போனதாக மாதவரம் பால் பண்ணை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விசாரணை மேற்கொள்ளாமல் வழக்கை கிடப்பில் போட்ட நிலையில் அக்டோபர் மாதம் இந்த புகாரை தூசி தட்டிய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அலமேலு என்பவர் இந்த வழக்கை விசாரித்த போது கார் ஓட்டுனர் தமிழ் செல்வனின் நண்பரான அம்பத்தூர் முருகானதம் என்பவர் இரவல் வாங்கிச்சென்று தஞ்சாவூரில் 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்தது தெரியவந்தது.
முருகானந்தம் மீது கார் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்யாமல் இருக்க காவல் ஆய்வாளர் அலமேலு கூகுல் பே மூலம் கையூட்டு பெற்றதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. அதற்கு ஆதாரமாக அலமேலு , குற்றவாளியான முருகானந்தத்திடம் பணம் கேட்டு பெறும் ஆடியோ வெளியானது.
மாஜிஸ்திரேட்டுக்கு பட்டாசும் ஸ்வீட் பாக்சும் கொடுக்க வேண்டும் என்று கூறி காவல் ஆய்வாளர் 5 ஆயிரம் ரூபாய் கேட்டுப்பெற்ற ஆடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள காவல் ஆய்வாளர் அலமேலு, முருகானந்தத்திற்கு ஆதரவாக அலிபாய் என்ற ரிப்போர்ட்டர் , தங்களது துணை ஆணையர் சுந்தரவதனத்திடம் சிபாரிசு செய்ததாகவும், அவர் கேட்டுக் கொண்டதின் பேரில் முருகானந்தம் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் திருடப்பட்டதாக கூறப்பட்ட கார் தஞ்சாவூரில் விற்கப்பட்டதாகவும் அந்த காரை தனது சொந்த செலவில் சென்று மீட்டு வந்ததால் அதற்கு ஆன செலவையே தான் அலிபாயிடம் சொல்லி முருகானந்தத்திடம் கூகுல் பேயில் கேட்டுப்பெற்றதாகவும், அதன் பின் திருட்டு வழக்கு மோசடி வழக்காக மாற்றப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக துணை ஆணையர் சுந்தர வதனத்திடம் கேட்ட போது, திருட்டு வழக்கு தொடர்பாக முருகானந்தத்தை பிடித்து கொண்டு வந்த போது அலிபாய் என்ற பத்திரிக்கை நிருபர் தன்னிடம் வந்து, முருகானந்தத்தை கைது செய்தால் அவரது மனைவி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறுகிறார், கால அவகாசம் கொடுத்தால் பணத்தை செட்டில் செய்து விடுவார் என்று உத்தரவாதமும் அளித்ததார், எனவே தானே முருகானந்தத்தை கைது செய்யாமல் விடுவிக்கி கூறியதாக தெரிவித்தார்.
தற்போது அதே அலிபாய் கொடுத்த புகாரின் பேரில் அவதூறாக பேசுவதாக முருகானந்தம் மீது புதிதாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments