வேட்புமனு நிராகரிப்பு-வாக்குவாதம், சாலை மறியல்
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையின்போது, பல்வேறு காரணங்களால் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பல இடங்களில் வாக்குவாதம், தள்ளுமுள்ளு சாலை மறியல் உள்ளிட்டவை நடைபெற்றன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பமனுத் தாக்கல் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி 23 வார்டில் அதிமுக நிர்வாகியான சரவணன் நதி என்பவரின் மனைவி தாரணி வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது வாக்காளர் அட்டையிலுள்ள முகவரியும் ஆதார் அட்டையிலுள்ள முகவரியும் வேறு வேறாக இருப்பதாகக் கூறி, வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சரவணன் நதி, போலீசாருடன் வாக்குவாதம் செய்தார்.
சேலம் மாநகராட்சி 14வது வார்டில் போட்டியிட அதிமுக முன்னாள் கவுன்சிலர் நடேசன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது மனைவி பெயரிலுள்ள வீட்டுக்கான வீட்டு வரியும் தண்ணீர் வரியும் கட்டவில்லை என்று கூறி, நடேசனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் ஒன்று, இரண்டு மற்றும் 11வது வார்டில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களில் அவர்களை முன் மொழிந்தவர்களின் கையொப்பங்கள் போலியானவை என தெரியவந்ததை அடுத்து, அவை நிராகரிக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட 7 ஆவது வார்டில், திமுக சார்பில் ஆனந்தி என்ற பெண் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி தேர்வாகிறார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி 15 வார்டில் திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த கவிதாசங்கர் என்பவர் அரசுக் கலைக்கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார் என்று கூறி அதிமுகவினர் வாக்குவாதம் செய்தனர். ஆனால் விரிவுரையாளர் பணியை ராஜினாமா செய்துவிட்டே கவிதாசங்கர் போட்டியிடுகிறார் என திமுகவினர் தெரிவித்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி 19 வது வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த தங்கமணி என்பவரது வேட்பு மனுவும், 20 வது வார்டில் போட்டியிடும் அவரது மனைவி மனோன்மணியின் மனுவும் ஏற்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாநகராட்சி 19வது வார்டு வேட்பாளர்ளை வேட்புமனு பரிசீலனைக்காக உள்ளே அனுப்பும் போது, பா.ஜ.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோமதி என்பவர் தனது கணவரும், பா.ஜ.க பிரமுகருமான ஜெகதீசன் உடன் மாநகராட்சி அலுவலத்திற்குள் நுழைய முயன்றார். வேட்பாளர் மட்டுமே உள்ளே செல்லலாம் என்று ஜெகதீசனை போலீசார் தடுத்ததால், அங்கு வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் பேரூராட்சி 3வது வார்டில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகள் புவனேஸ்வரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருக்கு பல இடங்களில் ஓட்டுகள் இருப்பதாக திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து புவனேஸ்வரியின் மனு நிறுத்தி வைக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் வடக்கு வள்ளியூர் பேரூராட்சி 12வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் குற்ற வழக்குப் பின்னணியை மறைத்ததாகக் கூறி அதிமுகவினர் வாக்குவாதம் செய்ததால், அவரது மனு நிறுத்திவைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி 5வது வார்டில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த அதிமுகவை சேர்ந்த முருகதாஸ் என்பவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையின் போது அதிமுக வேட்பாளர் ஒருவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால், அக்கட்சியினர் மாநகராட்சி ஆணையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ராமநாதபுரம் நகராட்சியின் 7ஆவது வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளரின் மனுவில் அடித்தல், திருத்தல் இருந்ததால் மனுவை நிராகரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், அதிமுகவினர் நகராட்சி ஆணையாளரை முற்றுகையிட்டு வாக்குவாதம் ஈடுபட்டனர்.
Comments