பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடர் கோலாகல தொடக்கம்.!
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கண்கவர் வாணவேடிக்கைகளுடன் தொடங்கியது. ரஷ்யா, சீனா உள்ளிட்ட 22 நாடுகளின் தலைவர்கள் தொடக்கவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சீனத் தலைநகர் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கியுள்ளது. 91 நாடுகளைச் சேர்ந்த 2,875 வீரர்-வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
சீன அதிபர் ஷி ஜின்பிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தொடங்கி வைத்தார். புதின், இம்ரான்கான் உள்ளிட்ட 22 நாடுகளின் தலைவர்கள் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.
தொடக்க விழாவில் ராட்சத ஐஸ் கட்டியில் வண்ண விளக்குகள் ஒளிரவிடப்பட்டு கலை விருந்து படைக்கப்பட்டன. உய்குர் இன வீரர் உள்பட இரண்டு ஒலிம்பிக் வீரர்கள் ஜோதியை ஏற்றினர்.
தொடக்க விழாவை முன்னிட்டு இருளையே பகலாக மாற்றும் அளவிற்கு வாண வேடிக்கைகள் விண்ணில் வர்ணஜாலம் நிகழ்த்தின. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான கலைஞர்கள் கலை நிகழ்வுகளை நிகழ்த்தி கலை விருந்து படைத்தனர்.
விழாவை தொடர்ந்து குளிர் கால ஒலிம்பிக் தொடரில் கலந்து கொண்டுள்ள 91 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டு தேசியக் கொடியை கையில் ஏந்தி அணிகளாக அணிவகுத்துச் சென்றனர்.
உக்ரைன் வீரர்கள் அணிவகுத்து வந்தபோது ரஷ்ய அதிபர் புதின் லேசாகக் கண் அயர்ந்தார். அந்த அணி வீரர்களை அவர் கண்டுகொள்ளாமல் இருந்ததாக சமூகவலைதளங்களில் விமர்சித்துள்ளனர்.
இந்தியாவில் சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே வீரரான முகமது ஆரிப் கான் அணிவகுப்பில் கொடியேந்திச் சென்றார்.
தொடக்க விழாவில் கலந்து கொள்ள பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் தொடர் நடக்கும் அரங்கின் வெளியே திரண்டு வாண வேடிக்கைகளை கண்டு களித்தனர்.
Comments