மொரோக்கோவில் ஆழ்குழாய்க் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்.. மீட்கும் பணி தீவிரம்..!
மொரோக்கோவில் ஆழ்குழாய்க் கிணற்றில் தவறி விழுந்து 104 அடி ஆழத்தில் 4 நாளாகச் சிக்கியுள்ள 5 வயதுச் சிறுவனை மீட்பதற்காக, அதன் அருகே ஆழமான குழியைத் தோண்டியுள்ள மீட்புக் குழுவினர் சிறுவனை நெருங்கியுள்ளனர்.
25 சென்டிமீட்டர் விட்டமுள்ள ஆழ்குழாய்க் கிணற்றில் சிறுவன் ராயன் தவறி விழுந்ததை அறிந்த பெற்றோர் ஊர் மக்களுடன் சேர்ந்து அவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கேமராவைச் செலுத்திப் பார்த்தபோது சிறுவன் தலையில் இலேசான காயமடைந்திருப்பதும், தன்னுணர்வுடன் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஆக்சிஜன் குழாய், உணவு, நீர் ஆகியவற்றைக் கயிறுமூலம் கீழிறக்கியுள்ளனர். ஆழ்குழாய்க் கிணற்றின் அருகே 35 மீட்டர் ஆழத்துக்கு மீட்புக் குழுவினர் பெரிய குழி தோண்டியுள்ளனர்.
சிறுவன் இருக்குமிடத்தை நெருங்கிவிட்டதாகவும், ஆழ்குழாய்க் கிணற்றை நோக்கிப் பக்கவாட்டில் துளையிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மணற்பாங்காகவும், பாறைப்பாங்காகவும் உள்ள நிலம் சரியும் அபாயமுள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அங்கு மருத்துவக் குழுவினர் தயார்நிலையில் உள்ளதுடன், சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல ஒரு ஹெலிகாப்டரும் நிறுத்தப்பட்டுள்ளது.
Comments