குடியால் கெட்ட கூட்டாளி தலையில் குத்திய கத்தியுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த குடிமகன்..! கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்
சேலம் அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட ஆத்திரத்தில் நண்பரை கத்தியால் விரட்டி விரட்டி குத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது. தலையில் குத்தப்பட்ட கத்தியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம், குண்டத்து மேட்டில் உள்ள அரசு மதுபான கடை ஒன்றில் வியாழக்கிழமை இரவு சவுந்தரராஜன் என்பவர், மூன்று நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார்.
அதில் சக்திவேல் என்ற நண்பர் சவுந்தர்ராஜனிடம் கடன் வாங்கி பல மாதங்களாக திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் சக்திவேலிடம் கொடுத்த பணத்தை சௌந்தரராஜன் திருப்பி கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதில் ஓசிகுடி என்று சக்திவேலுவை திட்டியதாக கூறப்படுகின்றது.
பலரது முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தியதால் ஆத்திரமடைந்த சக்திவேல் தனது வீட்டிலிருந்து சூரிக் கத்தியை எடுத்து வந்து மூன்று பேரையும் விரட்டி விரட்டி தாக்கியுள்ளார். இதில் கூட்டாளிகளான முருகேசன், மணிகண்டன் இருவருக்கும் கை மற்றும் மார்பில் காயம் ஏற்பட்ட நிலையில் தப்பி ஓடிய சௌந்திரராஜனை நோக்கி வெறி கொண்டு கத்தியை வீசியுள்ளார். அதில் அந்த கத்தி சவுந்தரராஜனின் தலையில் பாய்ந்தது. சக்திவேல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்ட நிலையில், தலையில் கத்தியுடன் உயிருக்கு போராடிய சவுந்தர்ராஜன், ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள மருத்துவர்கள் அவரது தலையில் பாய்ந்த கத்தியை அகற்றி சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கத்திக் குத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஜலகண்டாபுரம் போலீசார் குடிகார கூட்டாளி சக்திவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments