மணப்பெண் ஓட்டம் உயிருக்குப் போராடும் இரு சிறுமிகள்...! குழந்தைத் திருமண விபரீதம் !

0 5282

திருவாரூர் அருகே திருமணத்தன்று மணப் பெண் ஓட்டம் எடுத்ததால், 8 ஆம் வகுப்பு படித்து வந்த மணப்பெண்ணின் தங்கையை கட்டாயத் திருமணம் செய்து வன்கொடுமை செய்ததாக மாப்பிள்ளை உள்ளிட்ட திருமண கோஷ்டியினர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விஷம் அருந்திய இரு சிறுமிகள் உயிருக்கு போராடும் பின்னணி.

திருவாரூர் அருகேயுள்ள பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும், விழுப்புரம் மாவட்டம் ஆண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தில் விருப்பம் இல்லாததால் அந்த மணப்பெண் திருமண நாளன்று மாயமானார்.

இதனால் ஊரில் மரியாதை குறைந்து விடும் எனக் கூறி, மாப்பிள்ளை சிவக்குமார் வீட்டார், 8 ஆம் வகுப்பு படித்து வந்த மணமகளின் தங்கையான 13 வயதான சிறுமியை திருமணம் செய்து தனது வீட்டுக்கு அழைத்துச்சென்றுள்ளார். அன்று இரவு முதல் தொடர்ந்து 3 நாட்களாக பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, சிவக்குமார் சிறுமியிடம் வன்கொடுமை செய்திருக்கிறான்.

இதனால் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, கணவன் வீட்டாருக்குத் தெரியாமல் சொந்த ஊருக்கு ஓடிவந்திருக்கிறார். சிறுமியை சமாதானம் செய்ய இயலாத நிலையில் அந்த சிறுமி தொடர்ந்து படிக்கும் விதமாக, வேதாரண்யத்திலுள்ள பள்ளி ஒன்றில் அவரது பெற்றோர் சேர்த்துள்ளனர். மாணவியின் துணைக்கு சிறுமியின் சித்தப்பா மகளையும் அதே பள்ளியில் சேர்த்துள்ளனர்.

4 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சிறுமிக்கு தற்போது 17 வயது ஆகிவிட்டதால் வந்து குடும்பம் நடத்துமாறு சிவக்குமார் வீட்டார் வற்புறுத்தத் தொடங்கியுள்ளனர். தனது மனைவியை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள் என்று சிவக்குமாரும் அவரது குடும்பத்தினரும் கடுமையாக தொல்லை கொடுத்ததால் , மனம் நொந்து போன சிறுமி, வியாழக்கிழமையன்று குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து பாதி குளிர்பானத்தை குடித்துவிட்டு மீதமிருந்த குளிர்பானத்தை அவர் வீட்டில் மறைத்து வைத்திருந்துள்ளார். அந்த குளிர்பானத்தில் விஷம் கலந்திருப்பது தெரியாமல், அவரது சித்தப்பா மகளும் அருந்தியுள்ளார்.

காலையில் பள்ளிக்கு சென்ற நிலையில் இருவருமே மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து வந்த போலீசார், விசாரணைக்குப் பின் சிறுமியை திருமணம் செய்த சிவக்குமார், அவனது பெற்றோர், சிறுமியின் பெற்றோர், திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்த சிறுமியின் தாய் மாமன் உள்ளிட்ட 6 பேர் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மாப்பிள்ளை சிவக்குமார் மீது கூடுதலாக போக்சோ சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது போன்ற குழந்தைத் திருமணங்கள் குறித்து தெரியவந்தால் 1098 என்ற சைல்டு-லைன் உதவி எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் கொடுப்பவர் குறித்த விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments