மணக்கோலத்தில் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்த வேட்பாளர்..! கவனத்தை ஈர்த்த வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோரில் சிலர் வித்தியாசமாகவும், கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
மடிப்பாக்கத்தில் 3 நாட்களுக்கு முன் வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பிரமுகர் செல்வத்தின் மனைவி சபீனா, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மனுத் தாக்கல் செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நரிக்குறவ இன பெண் ஒருவர் ஆட்டம், பாட்டத்துடன் வந்து மனு தாக்கல் செய்தார்.
திருச்சி மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட வார்டில் போட்டியிட 80வயது முதியவரான ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்து மனுதாக்கல் செய்தார்.
ராமேஸ்வரத்தில் பெண் சுயேட்சை வேட்பாளர் ஒருவர், டம்மி நோட்டுகளை மாலையாக அணிந்து வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
கோவையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் ராஜா வேடமணிந்து தள்ளுவண்டியில் வந்து மனுதாக்கல் செய்தார். அதேபோல, பெண் ஒருவர் பாரதமாதா வேடமணிந்து வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதேபோல, 90ஆவது வார்டில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் நாபிக், தனது மகளுக்கு ஜெயலலிதா வேடமிட்டு எஸ்கார்ட் புடை சூழ அவரை அழைத்து வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சிறுவர்கள் பொம்மை துப்பாக்கியுடன் பாதுகாப்பு போலீசார் போல் வந்தது கவனத்தை ஈர்த்தது.
ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் தவழ்ந்து சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
திண்டுக்கல் மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். ஆதரவாளர்களில் கலைஞர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போன்று சிலர் தத்துரூபமாக வேடமணிந்து வந்திருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பெண் ஒருவர் தெருக்கூத்து மற்றும் இசை கலைஞர்களோடு ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்தார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் நரேந்திர மோடி வேடமணிந்து வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
Comments