பேச அனுமதிக்க நீங்கள் யார்? உங்களுக்கு உரிமையில்லை. எனக்கே அதிகாரம் - ராகுல் காந்திக்குப் பாடம் கற்பித்த மக்களவைத் தலைவர்
நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசியபோது குறுக்கிட்ட பாஜக எம்பியைப் பேச அனுமதிப்பதாக அவர் கூறியதைக் கண்டித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பேச அனுமதிக்க அவருக்கு உரிமையில்லை எனக் கூறி நாடாளுமன்ற நடைமுறைகள் பற்றிப் பாடம் கற்பித்துள்ளார்.
ராகுல்காந்தி பேசியபோது, பாஜக எம்பி கமலேஷ் பஸ்வானின் பெயரைக் குறிப்பிட்டுத் தவறான கட்சியில் உள்ள நல்ல மனிதர் எனத் தெரிவித்தார். அப்போது எழுந்து குறுக்கே பேசக் கமலேஷ் பஸ்வான் முயன்றபோது, அவைத் தலைவர் ஓம் பிர்லா அதை அனுமதிக்காததுடன், இடையில் பேசக் கூடாது, ஒருவர் பேசிய பின்தான் அடுத்தவரைப் பேச அனுமதிக்க முடியும் எனக் கூறிவிட்டார்.
பேச்சைத் தொடர்ந்த ராகுல்காந்தி தான் ஒரு ஜனநாயகவாதி என்பதால் கமலேஷ் பேச அனுமதிப்பதாகத் தெரிவித்தார். அப்போது, பேச அனுமதிக்க நீங்கள் யார்? என்றும், நீங்கள் அனுமதிக்க முடியாது என்றும், அது தனது அதிகாரம் என்றும் ஓம் பிர்லா தெரிவித்தார். யாரையும் பேச அனுமதிக்க உங்களுக்கு உரிமையில்லை என்றும், தலைவருக்கே அந்த அதிகாரம் உள்ளதாகவும் ஓம் பிர்லா தெரிவித்தார்.
Comments