குப்தா ஸ்வீட்ஸ் இனிப்புக்கடையில் சிக்கிய இடி மன்னர்கள்.. தைரிய லெட்சுமிக்கு போலீஸ் பாராட்டு.!

0 5991

சேலத்தில் இனிப்புக் கடையில் பணிபுரிந்த பெண்ணுக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த 3 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். போலீஸ் முன்பு நல்லவர் போல நடித்தவர்கள் சிசிடிவி காட்சிகளால் சிக்கிய  பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ளது செவ்வாய்பேட்டையில் ஸ்ரீகுப்தா ஸ்விட்ஸ் என்ற இனிப்புக் கடை உள்ளது.

இந்த கடையில் சேலம் நான்கு ரோடு அருகே உள்ள பெரமனூரை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 3 மாதத்திற்கும் மேலாக கடையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

அந்தப் பெண் பணியாளர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவரிடம் அங்கிருந்த ஆண் ஊழியர்கள் இரட்டை அர்த்தத்தில் பேசி வந்தனர். இது தவிர பொருட்கள் வைக்கப்பட்டு உள்ள அறைக்குள் பெண் செல்லும்போதும், வரும்போதும் அந்தப்பெண்ணை இடிப்பதும் உரசுவதுமாக இருந்துள்ளனர்.

மீண்டும் பலமுறை அந்தப் பெண் கண்டித்த நிலையிலும், தொடர்ந்து மூன்று பேர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகின்றது. முதல் கட்டமாக இதுகுறித்து அந்த பெண், கடை உரிமையாளரிடம் புகார் செய்தார். அப்போது கடையின் உரிமையாளர் வெளியில் தெரிந்தால் கடைக்கு பெயர் கெட்டுவிடும். நாங்கள் கண்டிக்கிறோம் எனக் கூறி மூன்று பேரையும் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த மூன்று பேரும் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்து வந்துள்ளனர்.

இதுகுறித்து அந்த இளம் பெண், தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்று அறிவுறுத்திய பெற்றோர் அந்தப் பெண்ணுக்கு திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் வேலையே போனாலும் பரவாயில்லை, இவர்களை சும்மா விடப்போவதில்லை என்று பொங்கி எழுந்த அந்த இளம்பெண் காவல் ஆணையர் நஜ்முல் ஹோடாவை பெற்றோருடன் சந்தித்து, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் அளித்தார். இதன்பேரில், அந்தப்பெண்ணிடம் வம்பு செய்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராகேஷ் சிங், தஞ்சாவூர் வன்மீகநாதன், புதுக்கோட்டை கணேசன் ஆகிய 3 பேரை பிடித்து செவ்வாய்பேட்டை காவல் ஆய்வாளர் கணேசன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தாங்கள் ஏதும் அப்படி நடந்து கொள்ளவில்லை எனத் தெரிவித்தனர். இதனால் போலீசார் கடையில் இருந்த சிசிடிவி காமிராவை கைப்பற்றி அதனை ஆய்வு செய்தனர். அப்போது இளம்பெண்ணை மூன்று பேரும் இடிப்பதும் உரசுவதும் இரட்டை அர்த்தத்தில் பேசுவதும் போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனை ஆதாரமாக கொண்டு ஊழியர்கள் மூன்று பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆத்தூர் கிளைச் சிறையில் அடைத்தனர். அச்சப்படாமல் தைரியத்துடன் புகார் செய்த இளம் பெண்ணை காவல்துறை அதிகாரிகள் அழைத்து பாராட்டி அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments