நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பு.!

0 2734

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாளுடன் நிறைவடைய உள்ள நிலையில், வேட்பாளர்கள் தேர்வு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது...

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என 649 அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வரும் 19ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 28ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதவிகளுக்குப் போட்டியிட இதுவரை 2 ஆயிரத்து 563 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தி.மு.க. தலைமைக் கழகம் நேற்று ஐந்தாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் காஞ்சிபுரம், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, தென்காசி, கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க. ஐந்து கட்டங்களாக வேட்பாளர்கள் பெயரை அறிவித்து, நேற்று இறுதிப் பட்டியலை வெளியிட்டது. 21 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டு விட்டன. த.மா.கா. உள்ளிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

தி.முக..- காங்கிரஸ் இடையேயான இடப்பங்கீடு இன்று நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் இடப்பங்கீடு இறுதி செய்யப்பட்டு வருகிறது.

பாஜக, பாமக, தேமுதிக, மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் தனித்தனியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

நாளை மறுநாள் மனுத்தாக்கல் நிறைவடைய இருப்பதால், மூன்று நாட்களில் ஆயிரக்கணக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments