மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல்.. நதிகளை இணைக்க புதிய திட்டம்..! விரைவில் வருகிறது 5ஜி சேவை

0 4274

நாட்டில் நதிகளை இணைக்க புதிய திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் ஆண்டில் 5 ஜி தொலைபேசி சேவை கொண்டு வரும் வகையில் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் விடப்படுமென்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டைபோல் இந்தாண்டும் காகிதமில்லா பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனை அடுத்து பேசிய அவர், கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கியுள்ளதாகவும், பொருளாதார சவால்களை இந்தியா திடமாக எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். உலகில் வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா மாறிவருவதாக கூறிய அவர், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.

மேலும், எல்ஐசி நிறுவனத்தின் பொது பங்குகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் நாட்டின் உற்பத்திக்கான ஊக்கத்தொகைத் திட்டம் நல்ல பலனை அளித்து வருவதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். வரும் நிதியாண்டில், தேசிய நெடுஞ்சாலைகளின் இணைப்புகள் 25,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிக்க இலக்கு நிர்ணயிப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேபோல், ரயில் நிலையங்களையும், நகர்புற மெட்ரோக்களையும் இணைக்க பெரியளவில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்ட அவர், அடுத்த 3 ஆண்டுகளில் 400 ஆற்றல் சிக்கனத்தின் அடிப்படையில் இயங்கும் ரயில்கள் தயாரிக்கப்படும் என்றும் 2023ஆம் ஆண்டிற்குள் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். 

கோதாவரி - கிருஷ்ணா, கிருஷ்ணா - பெண்ணாறு, பெண்ணாறு - காவிரி, தமங்கா - பிஞ்சல், பர்தாபி - நர்மதா ஆகிய 5 நதிகள் இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விவசாய பணிகளுக்கு டிரோன்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிரோன்கள் மூலம் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளித்தல், பயிர்களை பாதுகாத்தல், நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல் உள்ளிட்ட பணிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொளப்படும் என அவர் குறிப்பிட்டார். மேலும், நாட்டில் கல்வி சேவைக்கான தொலைக்காட்சி சேனல்கள் 12-இல் இருந்து 200-ஆக அதிகரிக்கப்படும் என்றும், பள்ளி செல்லும் குழந்தைகளின் நலனுக்காக நாடு முழுக்க 2 லட்சம் அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

நாடு முழுவதும் 2023ஆம் ஆண்டுக்குள் 80 லட்சம் வீடுகள், குறைந்த விலையில் கட்டப்படும் என்றும் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதலாக 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேட்டரிகளை மாற்றும் விதத்திலான மின் வாகன திட்டத்தை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்த அவர், நவீன தொழில் நுட்பத்தில் ஆன சிப் பொருத்தப்பட்ட இ - பாஸ்போர்ட் வழங்கும் நடைமுறை வரும் நிதியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்யும் வகையில் நாடு முழுக்க உள்ள ஒரு லட்சத்து 50,000 தபால் நிலையங்கள் முழுமையான பண பரிவர்த்தனை திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் நாடு முழுக்க உள்ள அனைத்து கிராமங்களுக்கும் வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள் பைபர் கேபிள் இணைப்பு வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

ஒரே நாடு ஒரே பதிவுமுறை திட்டத்தின் கீழ், மாநில பதிவு தரவுகள் ஒரே குடையின் கீழ் இணைக்கப்படும் என்றும் நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதேபோல், நடப்பாண்டிலேயே 5ஜி தொலைத்தொடர்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சூழல் பாதுகாப்புடன் 5ஜி தொலைத்தொடர்பு திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் உறுதியளித்தார்.

நாட்டின் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத்துறைகளின் ஆராய்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ராணுவத்திற்கான பட்ஜெட் மதிப்பில் 25 சதவீத நிதி, பாதுகாப்புத்துறை ஆராய்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், ஆயுத தளவாட இறக்குமதியை குறைத்து, உள்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு இராணுவத்தில் பயன்படுத்தப்படும் 68% தளவாடங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களுக்கு 3 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மூலதன கடனாக வழங்கப்படும் என்றும் வட்டி இல்லா கடன் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தனது உரையில் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments