தினம் 50ஆயிரம் சம்பாதிக்கனுமாம்... டார்கெட் வைத்து துன்புறுத்தல்: நடுங்க வைக்கும் பாலியல் சித்தரவதைகள்

0 5710

சென்னையில் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக, திரிபுராவில் இருந்து சிறுமிகளை அழைத்து வந்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல் போலீசில் சிக்கியுள்ளது. காசுக்காக சின்னஞ்சிறு பிஞ்சுகளை பெல்ட்டால் அடித்து துன்புறுத்திய கொடூர சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள தனியார் விடுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் தங்கியிருப்பதாக விடுதி ஊழியர்கள் கொடுத்த புகாரில் சோதனையில் ஈடுபட்ட பூக்கடை போலீசார் அறையிலிருந்த நான்கு சிறுமிகளை மீட்டனர். சிறுமிகளை அடைத்து வைத்திருந்ததாக பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற 2 பேர் தப்பியோடினர். விசாரணையில் சிறுமிகள் நால்வரும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

திரிபுரா மாநிலம் சுனாமுகி பகுதியைச் சேர்ந்த சலீமா கத்தூன் என்ற கொடூரப் பெண், தனது கணவர் அன்வர் உசேன், மைதீன், அலாவுதீன் என்ற கூட்டளிகள் இரண்டு பேருடன் சேர்ந்து, சென்னையில் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, திரிபுராவில் இருந்து சிறுமிகள் 4 பேரை சென்னைக்கு அழைத்து வந்திருக்கின்றனர். கேளம்பாக்கம் அருகே படூர் பகுதியிலுள்ள தனி வீட்டில் சிறுமிகளை அடைத்து வைத்திருந்த அந்த கும்பல், அவர்களை நிர்வாணப்படுத்தி, பெல்ட், கட்டை உள்ளிட்டவற்றால் தாக்கி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதோடு, கட்டாயப்படுத்தி தன்பால் ஈர்ப்பிலும் ஈடுபடவைத்து, அதனை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

பின்னர், தாங்கள் சொல்வது போல் பாலியல் தொழிலுக்கு ஒத்துழைக்க வில்லையென்றால், வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவோம் என மிரட்டி, சிறுமிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அந்த கும்பல், நாள் ஒன்றுக்கு 50ஆயிரம் ரூபாய்க்கு மேல், சம்பாதிக்கவேண்டும் எனக் கூறி, டார்கெட் நிர்ணயித்து, ஒரே இரவில் பல ஆண்களின் இச்சைக்கு இணங்க வைத்ததாக சிறுமிகள் தரப்பில் வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குடியரசுத் தினத்தன்று, சிறுமிகளை வேறொரு இடத்திற்கு ஆட்டோவில் ஏற்றி அந்த கும்பல் அழைத்துச் செல்ல முயன்ற போது, சிறுமிகளின் அலங்கோலத்தையும், அழுகையையும் பார்த்து அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே, கேளம்பாக்கத்தைச் சேர்ந்த காவலர்கள் மூன்று பேர் நேரில் சென்று உரிய விசாரணை நடத்தாமல் பாலியல் கும்பலிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு, சிறுமிகளை மீட்காமல் சென்றிருக்கின்றனர்.

அரசல், புரசலாக அக்கம்பக்கத்தினருக்கு விஷயம் தெரிந்ததால், உடனடியாக இடத்தை மாற்ற நினைத்த இந்த கும்பல், சிறுமிகளை பெங்களூருவுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளது. ரயிலில் அழைத்துச் செல்வதற்காக ரயில் நிலையம் அருகே விடுதியில் சிறுமிகளை தங்க வைத்திருந்த போது தான் போலீசில் சிக்கி, சிறுமிகள் மீட்கப்பட்டிருக்கின்றனர். சிறுமிகளை கொடுமைப் படுத்தப்பட்டதை கண்டுகொள்ளாமல் காசுக்காக பாலியல் கும்பலிடம் கையேந்திய கையூட்டு காவலர்கள் மூன்று பேரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த கும்பல், சிறு வயது பெண்களை குறிவைத்து வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் சிறுமிகளை நிர்வாணப்படுத்தி துன்புறுத்திய, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வீடியோக்கள் இருந்துள்ளன.

கும்பலின் தலைவியாக செயல்பட்டு வந்த சலீமா கத்தூணையும், அலாவுதீன் என்ற கூட்டாளியும் கைது செய்த போலீசார், சலீமாவின் கணவரையும், மற்றொரு கூட்டாளி மைதீனையும் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments