குறள் வழியில் தேசியக் கல்விக் கொள்கை - குடியரசுத் தலைவர்
கற்க கசடற என்ற திருக்குறளுக்கு ஏற்ப நாட்டின் தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் சுதந்திர போராட்ட தியாகிகள் அனைவருக்கும் மரியாதை செலுத்துவதாக கூறினார்.
நாட்டில் தகுதி உள்ள 75 சதவிகித பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறிய அவர், வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது என்றார்.
யாரும் பசியுடன் வீடு திரும்பக்கூடாது என்பதற்காக, ஏழைகளுக்கு இலவச உணவு பொருள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியதாகவும், அந்த திட்டம் மார்ச் 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஏழைகளின் சொத்துரிமையை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார். அடுத்த 25 ஆண்டுகளில் அனைத்து மக்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் அரசு திட்டம் தீட்டி வருவதாக அவர் தெரிவித்தார்.
திருவள்ளுவரின் கற்க கசடற எனும் குறளுக்கு இணங்க புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது என்றும், தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக உள்ளூர் மொழிகள் ஊக்குவிக்கப்படுவதாகவும், முக்கியமான நுழைவுத் தேர்வுகளை இந்திய மொழிகளில் நடத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
நாடு முழுவதும் நதிகளை இணைக்கும் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், பாரம்பரியமான மழைநீர் சேகரிப்பு முறைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் கூறினார். நாட்டில் 21 புதிய விமான நிலையங்கள் அமைக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து ஏராளமான திட்டங்களை அரசு முன்னெடுத்து வருவதாகவும், பாதுகாப்பு துறைக்கான தளவாட பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments