திருவண்ணாமலையில் இருவேறு சமூகங்களுக்கிடையே கலவரம் அரங்கேறிய கிராமத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சமாதானக் கூட்டம்.!
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே இருவேறு சமூகங்களுக்கிடையே கலவரம் நடைபெற்ற கிராமத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
வீரளூர் கிராமத்தில் கடந்த 16 ஆம் தேதி அன்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் சடலத்தை மற்றொரு சமூக மக்கள் வாழும் பகுதி வழியே எடுத்துச் சென்றதால் கலவரம் மூண்டது.
அதில் 10க்கும் மேற்பட்ட வீடுகள், 19 இருசக்கர வாகனங்கள் சூறையாடப்பட்டன. அங்கு மேலும் அசம்பாவிதம் ஏற்படாதவாறு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் வீரளூர் சென்ற அமைச்சர் எ.வ.வேலு, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து தனித்தனியே நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், பொதுப்பாதை என்பது அரசாங்கத்துக்குச் சொந்தமான, அனைவருக்குமான பாதை என்று கூறினார்.
இனிவரும் காலங்களில் சாதி, மதம் பாராது அனைவரும் அண்ணன், தம்பியாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Comments