TVS பைனான்ஸ் நிறுவன ஊழியரையே மடக்கி தூக்கிய சூறாவளி சுதா…! வண்டியை தூக்கியதற்கு பதிலடி

0 6257

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் தவணை தொகையை கட்ட தவறிய பெண்ணிடம் கூடுதல் கடன் தருவதாக ஆசைவார்த்தை கூறி இரு சக்கரவாகனத்தை தூக்கிச்சென்ற பைனான்ஸ் நிறுவன ஊழியர்களை உறவினர்களுடன் விரட்டிச்சென்ற அந்தப்பெண், ஒரு ஊழியரை மடக்கிப்பிடித்து அவருக்கு சொந்தமான இரு சக்கரவாகனத்தையும் செல்போனையும் பதிலுக்கு பறித்து வைத்துக் கொண்ட சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.

தமிழகத்தில் பிரபலமான பைனான்ஸ் நிறுவனங்களுள் ஒன்றான டி.வி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான நிதி நிறுவனத்தின் பெயரை கூறிய ஊழியர் தான் அந்த பெண்ணிடம் சிக்கி படாத பாடு பட்டு இறுதியில் தனக்கு சொந்தமான பைக்கையும் பறிகொடுத்தவர்..!

திண்டுக்கல் மாவட்டம் சிக்ராம் பட்டியை சேர்ந்தவர் சுதா. இவர் திண்டுக்கல்லில் உள்ள டி.விஎஸ் ஷோரூமில் ஜூபிட்டர் ஸ்கூட்டர் ஒன்றை முன் பணம் செலுத்தி மீதிப்பணத்தை தவணை முறையில் செலுத்துவதாக கூறி வாங்கி உள்ளார். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் 3 தவணை தொகையை கட்டாமல் இருந்துள்ளார். 15 ஆயிரம் ரூபாய் வரை தவணை செலுத்த வேண்டி இருந்ததாக கூறப்படுகின்றது. சுதா காலம் தாழ்த்தி வந்ததால் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து வாகனத்தை பறிமுதல் செய்ய இருவரை அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.

சுதாவிடம் பேச்சுக்கொடுத்த இருவரும் வாகனத்தின் பேரில் கூடுதலாக கடன் தருவதாக ஆசைவார்த்தை கூறி ஜூபிட்டர் வண்டியுடன் சுதாவை பைனான்ஸ் நிறுவனத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்குள்ள அலுவலகத்தில் ஒருவரிடம் சுதாவை பேசவைத்து விட்டு, ஒருவன் சுதாவின் வாகனத்தை தூக்கிக் கொண்டு சென்றதாக கூறப்படுகின்றது. மற்றொருவன் அவனது வாகனத்தில் சென்றுள்ளான். இதையடுத்து உஷாரான சுதா, தனது கணவர் மற்றும் அண்ணனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்களுடன் சேர்ந்து அந்த இருவரில் ஒருவனை சுதா விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்துள்ளார். அந்த நபரோ 3 தவணை தொகை பாக்கி இருப்பதால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறி உள்ளார். அந்த நபரிடம் பைனான்ஸ் ஊழியர் என்பதற்கான எந்த அடையாள சான்றும் இல்லாததால் எப்படி தனது வண்டியை தூக்கலாம் என்று கேட்டு சுதா ஆபாச வார்த்தைகளால் சூறாவளியாக சுழன்று அடிக்க தொடங்கினார்

அந்த ஊழியரோ தான் வேலைக்கு புதுசு என்று கூறி சமாளிக்க அவரது செல்போன் மற்றும் இரு சக்கரவாகனத்தை கைப்பற்றிய சுதா, அவரை மிரட்டி இரு சக்கரவாகனத்தில் ஏற்றி தனது வீட்டுக்கு சிறைபிடித்துச் சென்றார்.

தனது மனைவியின் ஆவேச வார்த்தைகளை கண்ட கணவர் ஒரு நிமிடம் அதிர்ந்து போய்விட்டார் என்றே சொல்ல வேண்டும்

அதன் பின்னர் அந்த ஊழியரின் நிலை என்னவானது என்பது குறித்து சூறாவளி சுதாவை தொடர்பு கொண்டு கேட்ட போது, தனது இரு சக்கர வாகனத்தை தூக்கிச்சென்றதற்கு பதில் அடியாக நிதி நிறுவன ஊழியரின் இருசக்கரவாகனத்தையும், செல்போனையும் தான், பறித்து வைத்துக் கொண்டு அந்த ஊழியரை விரட்டி விட்டதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சுதா தரப்பிலும், நிதி நிறுவனம் தரப்பிலும் காவல் நிலையத்திற்கு புகார் செல்லாததால் பட்டபகலில் பலபேர் மத்தியில் நிதி நிறுவன ஊழியர் இரு சக்கர வாகனத்துடன் கடத்தப்பட்ட சம்பவம் போலீசார் கவனத்துக்கு செல்லவில்லை என்று கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments