மாமனார் மீன்பாடி வண்டி ஓட்டுவதை கேவலமாக எண்ணிய மருமகன்.. மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடி சிக்கினான் !

0 6135
சென்னையில் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆகும் நிலையில், மனைவியை மிதித்தே கொன்ற போதை ஆசாமி ஒருவன், அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னையில் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆகும் நிலையில், மனைவியை மிதித்தே கொன்ற போதை ஆசாமி ஒருவன், அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாமனார் மீன்பாடி வண்டி ஓட்டுவதை கேவலமாக எண்ணிய மருமகனின் வெற்று கௌரவம், அவனை சிறைக்குள் தள்ளி இருக்கிறது. 

தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஹரி - ஜீவிதா தம்பதிக்கு கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. கார் ஷோ - ரூம் ஒன்றில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த ஹரி மதுவுக்கு அடிமையானவன் என்று கூறப்படுகிறது. 26 வயதான ஜீவிதா தியாகராயர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

கல்லூரி படிக்கும் மகளுக்கு உதவியாக அவரது தந்தை மகேந்திரன், மகள் வீட்டில் வந்து தங்கி இருந்துள்ளார். மகேந்திரன் வாடகைக்கு மீன்பாடி வண்டி ஓட்டி வந்தார் என்று கூறப்படும் நிலையில், அதனை ஹரி கௌரவக்குறைவாக எண்ணியுள்ளான். மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் அதுகுறித்து சண்டை போட்டு வந்துள்ளான்.

கடந்த வியாழக்கிழமை இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் ஹரி சண்டையிடவே, பெற்ற மகளை தன் கண் முன்னாலேயே மருமகன் ஆபாசமாகப் பேசுவதை தாங்கிக் கொள்ள முடியாத மகேந்திரன், அங்கிருந்து கிளம்பி தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

சில மணி நேரங்களில் ஜீவிதாவின் தம்பியிடம் யதார்த்தமாக பேசுபவன் போல பேசிய ஹரி, ஜீவிதா தன்னுடன் சண்டையிட்டுக் கொண்டு தந்தையோடு கிளம்பி வீட்டுக்குச் சென்றுவிட்டார் எனக் கூறியுள்ளான். ஆனால் தன்னுடன் மகள் வரவில்லை என மகேந்திரன் கூறவே, ஹரியின் வீட்டுக்குச் சென்றுள்ளார் ஜீவிதாவின் தம்பி.

முதலில் மனைவி எங்கு சென்றார் எனத் தெரியவில்லை எனத் தெரிவித்த ஹரி, மைத்துனனுடன் சேர்ந்து மனைவியைத் தேடுவது போல நாடகமாடியுள்ளான். அப்போது வீட்டின் கழிவறையில் ஜீவிதாவின் சடலம் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளது.

கத்திக் கதறி கூப்பாடு போட்ட ஹரி, 108 ஆம்புலன்சை போனில் அழைத்து மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளான். அங்கு ஜீவிதாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து சில மணி நேரங்கள் ஆவதாகக் கூறியுள்ளனர்.

ஜீவிதா தைரியமான பெண் என்று கூறும் உறவினர்கள், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகாரளித்தனர். இதனையடுத்து ஜீவிதாவின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால், வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது.

அதில் ஜீவிதாவின் நெஞ்சுப் பகுதியில் பலமாக எட்டி உதைத்ததில் அவரது இதயம் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சந்தேக மரணம் என்று பதியப்பட்ட வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு ஹரி கைது செய்யப்பட்டான்.

திருமணத்தின் போது மகளின் பெயரில் ஒரு வீட்டையும் கடையையும் எழுதிக் கொடுத்ததாகக் கூறும் மகேந்திரன், அதனை விற்றுத் தருமாறு மருமகன் வீட்டார் வற்புறுத்தி வந்ததாகக் கூறுகிறார். வீட்டையும் கடையையும் விற்பதில் ஜீவிதாவுக்கு உடன்பாடு இல்லாததால், அவரை கொடுமைப்படுத்தி வந்ததாகவும் அவர் கூறுகிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments