வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அ.தி.மு.க., தி.மு.க. மும்முரம்.!

0 1888

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வேட்புமனுத் தாக்கல் முடிய 6 நாட்களே உள்ள நிலையில், போட்டியிடும் வார்டுகளை முடிவு செய்வதில், தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

மாநகராட்சிகளில் 1,374 பேர், நகராட்சிகளில் 3,843 பேர், பேரூராட்சிகளில் 7,621 பேர் என 12,838 உறுப்பினர்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல்நாளான நேற்று ஆங்காங்கே ஓரிருவர் மட்டுமே மனுத்தாக்கல் செய்தனர்.

இடப்பங்கீடு தொடர்பாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இன்று சந்தித்துப் பேச இருப்பதாகக் கூறப்படுகிறது.

வேட்பாளர்கள் தேர்வு, பிரச்சார வியூகம் குறித்து நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். ஆகியோர் நேற்று கலந்தாலோசனை மேற்கொண்டனர்.

அக்கட்சியுடன் கூட்டணியில் இருந்த பா.ம.க. தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டதால், பாஜக விரைவில் வார்டு பங்கீடு தொடர்பாக பேச்சு நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தே.மு.தி.க., அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதிமய்யம் உள்ளிட்ட கட்சிகளும் தனித்தனியாகக் களம் இறங்க உள்ளன. வேட்புமனுத் தாக்கலுக்கு 6 நாட்களே இருப்பதால் ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments