ஃப்ரீபயர் விளையாட்டுக்கு பணத்தை திருடாதீங்க.. திருந்திய மாணவர் அட்வைஸ்..!

0 3737

ஃப்ரீ பையர் விளையாட்டில் கிராபிக்ஸ் ஆயுதங்கள் வாங்குவதற்காக, வீட்டில் பணம் திருடி சிக்கிக் கொண்ட சிறுவர்களை அழைத்து காவல்துறையினர் அறிவுரை கூறி பெற்றோரிடம் அனுப்பிவைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய பகுதியில், பள்ளிச் சிறுவர்கள் ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் மூழ்கி, தங்களது கல்வியை இழந்தது மட்டுமின்றி, வீட்டில் பணத்தைத் திருடி விளையாட்டிற்கு செலவழிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த 14வயது சிறுவன், தனது தந்தையின் பையில் இருந்து 3 ஆயிரம் ரூபாயைத் திருடி ஃப்ரீ ஃபயர் ஐடி வாங்கி விளையாட்டில் இழந்த நிலையில், வீட்டில் தெரிந்தால் பிரச்சினை வரும் என நினைத்து, வீட்டில் இருந்து காணாமல் போய் விட்டான். புகாரின் பேரில், புதியம்புத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சிறுவனைத் தேடிவருகின்றனர். தற்போது வரை அந்த சிறுவனைக் கண்டுபிடிக்கவில்லை.

அவனைப் போலவே பல சிறுவர்கள் ஃப்ரீ ஃபயர் விளையாட்டிற்காக, வீட்டில் பணத்தைத் திருடும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை ராஜீவ் நகரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வரும் அரசுப் பள்ளி மாணவன் ஒருவன், தொடர்ச்சியாக செல் போனில் ஃப்ரீ ஃபயர் விளையாடி வந்துள்ளான்.

ஃப்ரீ ஃபயரில் விதவிதமான கிராஃபிக்ஸ் ஆயுதங்கள், பறந்து செல்ல கிராபிக்ஸ் ரெக்கைகள் வாங்குவதற்காக, தனது தந்தைக்குத் தெரியாமல் அவரது சட்டைப் பையில் இருந்து, 4 ஆயிரம் ரூபாய் எடுத்து ஃப்ரீ ஃபயரில் செலுத்தி விளையாடி உள்ளான்.

இது அவனது தந்தைக்கு தெரிந்துவிட, அவர் பசுவந்தனை காவல் நிலையத்திற்கு மகனை அழைத்துச் சென்று, அறிவுரை வழங்கும்படி கேட்டுக் கொண்டார். பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் சித்ரகலா நடத்திய விசாரணையில், தனது நண்பர்களுடன் ஃப்ரீ ஃபயர் விளையாடுவதற்காக செல்போன் ரீசார்ஜ் கடையில் 4,000 ரூபாய்க்கு பணம் கட்டியதாக அச்சிறுவன் தெரிவித்தான்.

இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அவனுக்கு அறிவுரை வழங்கிய காவல் ஆய்வாளர் சித்ரகலா, சிறுவனை எச்சரித்து, பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

ரம்மியைப் போல சிறுவர்களிடம் பணத்தைப் பறிக்கும் ஆன்லைன் விளையாட்டான ஃப்ரீ ஃபயரைத் தடை செய்ய ஆவண செய்ய வேண்டும் என்பதே பெற்றோர்களின் வேண்டுகோளாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments