தமிழகத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு..!
தமிழ்நாட்டில் வரும் 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் இரவு நேர மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதனை அடுத்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், பிப்ரவரி 1ஆம் முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் வரும் 1ஆம் தேதி முதல் செயல்பட அனுமதியளிக்கப்படுவதாகவும், மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், வரும் 28ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் என்றும் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும்,பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும்
கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும் என்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொருட்காட்சிகள், அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. உணவகங்கள், விடுதிகள், பேக்கரிகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும் என்றும் துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும் என்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்படவும், அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவை ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்படவும் அரசு அனுமதியளித்துள்ளது.
மேலும், நீட்டிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மட்டும் வரும் 1ஆம் முதல் 15ஆம் வரை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments