மீண்டும் டாடா நிறுவனத்திடம் ஏர் இந்தியா..!
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா, அதிகாரப்பூர்வமாக டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 69 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த விமான நிறுவனத்தை மீண்டும் டாடா குழுமம் கையகப்படுத்தி உள்ளது.
நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலத்தில் மத்திய அரசு விற்பனை செய்த போது, 18 ஆயிரம் கோடி ரூபாய் விலைக்கு டாடா குழுமம் அதனை வாங்கியது. இதில் 2700 கோடி ரூபாய் அரசுக்குப் பணமாக கொடுக்கப்படும் என்றும், மீதமுள்ள 15,300 கோடி ரூபாய் ஏர் இந்தியாவின் கடனை தீர்க்க பயன்படுத்தப்படும் என்றும் டாடா நிறுவனம் அறிவித்தது. இதையடுத்த அந்த நிறுவனத்தை டாடா குழுமத்திடம் ஒப்படைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
இதற்கான பணிகள் கடந்த சில வாரங்களாகவே நடைபெற்று வந்த நிலையில் இன்று ஏர் இந்தியா நிறுவனத்தில் இயக்குனர்களாக உள்ள அரசு பிரதிநிதிகள் ராஜினாமா செய்தனர். டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார். இதன் பின்னர் ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படுவதாக முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மை நிறுவன செயலாளர் துகின் காந்த் அறிவித்தார்.
இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை தனது பொறுப்பில் ஏற்று அதற்கு புதிய தலைமை அதிகாரி மற்றும் முக்கிய அதிகாரிகளை நியமிக்க இருப்பதாகவும், ஏர் இந்தியாவை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
1932 ஆம் ஆண்டு டாடா நிறுவனம் தொடங்கிய விமான நிறுவனத்தை மத்திய அரசு 1953 ஆம் ஆண்டு தேசியமயமாக்கி, ஏர் இந்தியா என மாற்றியது. இப்போது 69 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அதே விமான நிறுவனத்தை டாடா நிறுவனம் தனது உடைமையாக்கி உள்ளது.
Comments