அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு.. நாட்டுப்புறக் கலைஞர்களின் நடனம்..!
குடியரசு நாள் விழாவில் பல்வேறு மாநிலங்கள் சார்பிலும், பல்வேறு அமைச்சகங்களின் சார்பிலும் பங்கேற்ற அலங்கார ஊர்திகளும், ஊர்திகளின் அருகில் நடந்து வந்த கலைஞர்களின் நடனங்களும் பார்வையாளர்களைக் கவர்ந்தன.
டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் மேகாலய மாநிலம் சார்பில் பங்கேற்ற ஊர்தி முழுவதும் மூங்கில், பிரம்புப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விடுதலைப் போராட்டத்தில் பழங்குடியினரும் பங்கேற்றதைக் காட்டும் வகையில் குஜராத் மாநிலத்தின் அலங்கார ஊர்தி அமைந்திருந்தது.
உத்தரக்கண்ட் மாநில அலங்கார ஊர்தியில் ஹேம்குண்ட் சாகிப் குருத்துவாரா, டோப்ரா - சாந்தி பாலம், பத்ரிநாத் கோவில் ஆகியவற்றின் வடிவங்கள் இடம்பெற்றிருந்தன. கோவா மாநிலப் பண்பாட்டைப் பறைசாற்றும் வகையில் அம்மாநில அலங்கார ஊர்தியில் அகடா கோட்டை, தியாகிகள் நினைவுச் சின்னம், ஆசாத் மைதானம் ஆகியன இடம்பெற்றன.
அருணாசலப் பிரதேசம், கர்நாடகம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் அணிவகுத்துச் சென்றன. விளையாட்டில் முதலிடம் என்பதைக் காட்டும் வகையில் அரியானா மாநில அலங்கார ஊர்தி அமைந்திருந்தது.
பஞ்சாப் அலங்கார ஊர்தியில் விடுதலைப் போராட்ட வீரர்கள், நிகழ்ச்சிகளைக் காட்டும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. உத்தரப்பிரதேச அலங்கார ஊர்தியில் மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக் கொள்கையை விளக்கும் காட்சிகள், காசி விசுவநாதர் கோவில் வடிவங்கள் இடம்பெற்றன.
விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் அலங்கார ஊர்தியில் உடான் திட்டம் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகள் இணைக்கப்பட்டதை விளக்கும் காட்சி இடம்பெற்றது. நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் குழாய் மூலம் வழங்கும் இலக்கை நோக்கிச் செயல்படுவதைக் காட்டும் வகையில் ஜல்சக்தி அமைச்சகத்தின் அலங்கார ஊர்தி அமைந்திருந்தது.
Comments