குடியரசு விழாவில் கண்கவர் நடனம்.. படையினரின் சாகசக் காட்சிகள்..!
டெல்லி ராஜபாதையில் குடியரசு நாள் கொண்டாட்டத்தில் பல மாநிலங்களின் கலை பண்பாட்டை விளக்கும் வகையிலான நடனங்களும், ராணுவ வீரர்கள், விமானப் படையினரின் சாகசக் காட்சிகளும் பார்வையாளர்களைக் கவர்ந்தன.
டெல்லி ராஜபாதையில் குடியரசு நாள் விழாவில் பல்வேறு மாநிலங்களின் கலை, பண்பாட்டை விளக்கும் வகையில் ஒடிசி, குச்சிப்புடி, பங்க்ரா, கதக்களி உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அந்தந்த மாநிலங்களின் பண்பாட்டை விளக்கும் வகையில் பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் உடையணிந்த நடனக் கலைஞர்கள் இசைக்கேற்ப நடனமாடியது பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.
மோட்டார் சைக்கிள்களில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நிகழ்த்திக் காட்டிய சாகசங்கள் பார்வையாளர்களை வியப்படையச் செய்தன. குடியரசு நாள் விழா விமான சாகசத்தில் விமானப்படையின் 75 விமானங்கள் பங்கேற்றன.
ரபேல் வகையைச் சேர்ந்த ஐந்து விமானங்கள் அம்புக் குறி வடிவத்தில் ஒரேநேரத்தில் பறந்து சென்றன. இதேபோல் ரபேல், ஜாகுவார், மிக், சுகோய் வகையைச் சேர்ந்த 7 விமானங்களும் அம்புக்குறி வடிவத்தில் பறந்து சென்றன.
சூப்பர் ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம் உள்ளிட்டவை மேகமண்டலத்துக்கு மேலே வானில் பறந்து சென்ற காட்சிகளை விமானத்தில் இருந்தே படம்பிடித்து வெளியிட்டுள்ளனர்.
நாட்டு விடுதலையின் 75ஆம் ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் 17 ஜாகுவார் விமானங்கள் ஒரே நேரத்தில் வானில் பறந்து 75 என்கிற எண்ணைக் காட்டும் தோற்றத்தை உருவாக்கின.தேசியக் கீதத்துடன் குடியரசு நாள் விழாக் கொண்டாட்டங்கள் நிறைவுபெற்றன.
Comments