73 வது குடியரசு தினம் - டெல்லியில் முப்படைகளின் கண்கவரும் அணிவகுப்பு !

0 5513

இந்தியாவின் ராணுவ பலம், கலாசாரம், பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் டெல்லியில் இன்று குடியரசு தின அணிவகுப்பு நடைபெறுகிறது.

73வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழா தொடங்கும் முன்பாக, தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். விஜய் சவுக் பகுதியில் இருந்து ராஜபாதை வழியாக தேசிய மைதானத்தை முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறுகிறது. முப்படை அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொள்கிறார்.

ராணுவ பலத்தை காட்டும் வகையில் அதிநவீன பீரங்கிகள், டாங்கிகள், ஆகாஷ் ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம்பெறும். மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர், அதிநவீன ட்ரோன்கள் உள்ளிட்ட நவீன போர் விமானங்கள் கொண்ட விமானப்படை சாகசமும் நடைபெற உள்ளன. தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

முதல் முறையாக 75 விமானங்களும் ஹெலிகாப்டர்களும் இந்த அணிவகுப்பில் கலந்துக் கொள்கின்றன.ஆயிரம் டிரோன்களும் இந்த ஆண்டு அணிவகுப்பில் முதன்முறையாக பங்கேற்கின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட 480 நடனக் கலைஞர்களின் கண்கவரும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
குடியரசு தின விழா காலை 10.30 மணிக்குத் தொடங்கி, நண்பகல் 12 மணிக்கு நிறைவடைகிறது.

குடியரசு தினத்தையொட்டி தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர். சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி திரியும் நபர்களை கண்காணித்து வருகின்றனர். சோதனை சாவடிகளில் வாகனங்களை தடுத்து நிறுத்தி, முறைப்படி சோதனை செய்து வருகின்றனர்.

டெல்லியில் பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் கணிகாணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மாநகரம் முழுவதும் முக அடையாளம் காணும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெறுகிறது. குடியரசு தின விழா நடைபெறும் பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments