போலீசையே பயன்படுத்தி மோசடி.. திருட்டில் இது வேற லெவல்.....!
கர்நாடகாவில் தங்கநகைகள் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகாரளித்து போலீசையே நூதன முறையில் ஏமாற்றி லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்த 3 பெண்கள் உட்பட 7 பேர் போலீசில் சிக்கியுள்ளனர்.
கர்நாடக மாநில எல்லையிலுள்ள சர்ஜாபுரம் பகுதியை சேர்ந்த ரவி பிரகாஷ் சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ தங்க நகைகள் திருடு போனதாக சர்ஜாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், திருட்டு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தங்கள் வீட்டுக்கு பக்கம் அடிக்கடி வந்து சென்ற ஒரு நபர் மீது சந்தேகம் உள்ளதாக அவர்கள் தெரிவித்ததை வைத்து, தீபக் என்பவனைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அவனும் தாம் நகையைத் திருடியது உண்மைதான் என ஒப்புக்கொண்டு நகைகளை அடகு வைத்ததாக அடகுக் கடை ஒன்றைக் காண்பித்துள்ளான். பிறகு அந்த நகைகள் மீட்கப்பட்டு, ரவி பிரகாஷ் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனாலும் போலீசாருக்கு ரவி பிரகாஷ் மற்றும் தீபக்கின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழவே, சம்பவம் குறித்து ரகசியமாக மீண்டும் ஆய்வு செய்துள்ளனர்.
அப்போதுதான் ரவிபிரகாஷ் மற்றும் தீபக் உட்பட அந்தக் குடும்பத்தினர் அனைவருமே மோசடிப் பேர்வழிகள் என்பதும் தங்களது மோசடிக்குப் போலீசையே அவர்கள் பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்தது.
ரவி பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என மொத்தம் 7 பேர் சேர்ந்து தங்களுக்குச் சொந்தமான தங்க நகைகளை தீபக் மூலம் அடமானம் வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர்.
பிறகு அந்த நகைகள் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்து, தீபக் குறித்து சந்தேகம் எழுப்பி அவனை கைது செய்ய வைத்து, அடகுக் கடையில் இருந்து போலீசார் மூலம் நகைகளை செலவில்லாமல் மீட்டுள்ளனர்.
பின்னர் தீபக்கை தங்களில் ஒருவரே சென்று ஜாமீனில் வெளியே எடுத்துவிட்டு, வேறு இடத்துக்கு குடிபெயர்ந்து இதே பாணியில் மோசடியில் ஈடுபடுவது என இந்த கும்பல் செயல்பட்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நகைகள் திருடுபோனதாகக் கூறப்பட்ட அன்றைய தினத்தில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் தீபக் பட்டப்பகலில் ரவி பிரகாஷ் வீட்டிற்கு வெகு அருகில் நகைகள் அடங்கிய பையுடன் சாவகாசமாக நடந்து செல்வது பதிவாகி இருந்தது.
அந்தக் காட்சிதான் தங்களுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கும்பல் இதே பாணியில் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர்கள் கூறினர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 7 பேர் போலீசார் வசம் சிக்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதுமுள்ள காவல் நிலையங்களுக்கு அவர்களுடைய புகைப்படங்களை அனுப்பி, இதே பாணியில் உள்ள புகார்கள் குறித்தும் சர்ஜாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments