ஹவுதி ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கி அழித்த ஐக்கிய அரபு அமீரகம்
ஹவுதி கிளர்ச்சி இயக்கத்தினரின் இரண்டு ஏவுகணைகளை ஐக்கிய அரபு அமீரகம் இடைமறித்துத் தாக்கி அழித்துள்ளது.
ஏமனில் இருந்துகொண்டு செயல்படும் ஹவுதி கிளர்ச்சி இயக்கத்தினர் கடந்த ஆறாண்டுகளாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணிக்கு எதிராக ஏவுகணைகள், டிரோன்கள் கொண்டு பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்நிலையில் ஜனவரி 17ஆம் நாள் முதன்முறையாக ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் எரிபொருள் கிட்டங்கி மீது ஹவுதி இயக்கத்தினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் இந்தியர் இருவர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இன்றும் அபுதாபியில் உள்ள இலக்குகளைக் குறிவைத்து ஹவுதி இயக்கத்தினர் ஏவுகணைகளைச் செலுத்தியுள்ளனர். அப்போது அவற்றை இடைமறித்துத் தாக்கி அழித்ததாக ஐக்கிய அரபு அமீரகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments