நேதாஜிக்கு ஹோலோகிராம் சிலை.. பிரதமர் மோடி திறந்து வைத்தார்..!
டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஹோலோகிராம் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, இந்தியர்கள் மனதில் நேதாஜி நம்பிக்கையை வளர்த்தவர் என புகழாரம் சூட்டினார்...
தேசம் விடுதலை பெற போராடிய தலைவர்களில் முதன்மையானவராக கருதப்படும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சுதந்திர போராட்டத்திற்காக இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமைக்கும் சொந்தக்காரராவார்.
நேதாஜியின் 125-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரை சிறப்பிக்கும் வகையில் கிரானைட் கல்லால் ஆன சிலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21ஆம் தேதி அறிவித்திருந்தார்.
28 அடி உயரத்திலும், 6 அடி அகலத்திலும் நேதாஜியின் சிலை பிரம்மாண்டமான அளவில் நிறுவப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.நேதாஜியின் கிரானைட் சிலை அமைக்கும் பணி நிறைவடையும் வரை அந்த இடத்தில் ஹோலோகிராம் எனப்படும் முப்பரிமாண மெய்நிகர் சிலை ஒன்று அமைக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்திருந்தார்.
அதன்படி, டெல்லி இந்தியா கேட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, நேதாஜியின் ஒளி வடிவிலான சிலையை திறந்து வைத்தார். மேலும், 2019, 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளுக்கான சுபாஷ் சந்திர போஸ் பேரிடர் மேலாண்மை விருதுகளையும் பிரதமர் மோடி வழங்கி கவுரவித்தார்.
இதனை அடுத்து பேசிய பிரதமர் மோடி, இந்தியர்கள் மனதில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தன்னம்பிக்கையை வளர்த்தவர் என்றும், கடுமையான சோதனைகளை எதிர்கொண்ட போதிலும் பிரிட்டிஷ் அரசுக்கு அடிய பணிய மறுத்தார் என்றும் புகழாரம் சூட்டினார்.
மேலும், வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் வரலாற்று சிறப்பான நிகழ்வு அரங்கேறி உள்ளது என குறிப்பிட்ட அவர், நேதாஜியின் சிலை வருங்கால சந்ததியினரை ஊக்குவிக்கும் என்று தெரிவித்தார்.
Comments