ஆப்பு வைத்த ஆன்லைன் சூதாட்டம் திருடனாக மாறிய மென்பொறியாளர் வங்கியில் திருடி வசமாக சிக்கினார் !

0 3755

பெங்களூருவில் ஆன்லைன் வர்த்தகத்தில் பல லட்ச ரூபாயை இழந்த மென் பொறியாளர் ஒருவன், அதற்காக வாங்கிய கடன்களை அடைக்க கொள்ளையடிப்பது எப்படி என யூடியூப் பார்த்து பயிற்சி எடுத்துக் கொண்டு வங்கியில் கொள்ளையடித்து சிக்கிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கத்தி முனையில் வங்கி பெண் ஊழியர் உட்பட இருவரை மிரட்டி, கட்டுக்கட்டாக 85 லட்ச ரூபாய் பணத்தை அவன் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த 14ஆம் தேதி பொங்கல் விடுமுறை நாளில் பெங்களூரு BTM லேஅவுட் பகுதியில் உள்ள SBI வங்கி கிளையில் ஒரு பெண் உட்பட இரண்டு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வந்துவிட்டு, மாலை 5.30 மணிக்கு வங்கியை பூட்டிவிட்டு புறப்பட தயாராகியுள்ளனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர் ஒருவன், திடீரென தாம் வைத்திருந்த கத்தியை பெண் ஊழியரின் கழுத்தில் வைத்துக் கொண்டு வங்கிக் கதவை திறக்கும்படி ஆண் ஊழியரை மிரட்டியுள்ளான். அந்த ஆண் ஊழியரும் அஞ்சி நடுங்கியவாறே வங்கிக் கதவின் பூட்டை திறந்துள்ளார்.

வங்கிக்குள் சென்ற கொள்ளையன், அவர்கள் இருவரையும் தள்ளி நிற்க வைத்துவிட்டு, சாவகாசமாக லாக்கரில் இருந்த சுமார் 85 லட்ச ரூபாய் பணத்தை எடுத்து, கையிலும் பையிலுமாகத் திணித்துக் கொண்டு, எந்தவித பதற்றமும் இல்லாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளான்.

தகவலறிந்து வந்த போலீசார், வங்கியில் தொடங்கி, அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்கள் அத்தனையையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில், கொள்ளையன், வங்கியிலிருந்து பேருந்து நிறுத்தத்துக்குச் சென்று, மங்களூரு, ஷிமோகா, அனந்தபூர் என பேருந்திலேயே பல இடங்களுக்கும் சுற்றியது தெரியவந்தது.

மாநகர், புறநகர் முழுக்க உள்ள போலீசாரை உஷார்படுத்தி, மர்ம நபரின் புகைப்படத்தை அனுப்பி, அவனை ரகசியமாகப் கண்காணித்த போலீசார், பெங்களூருவில் வைத்து வெள்ளிக்கிழமை அந்த நபரை மடக்கிக் கைது செய்தனர்.

விசாரணையில் அவன் பெயர் தீரஜ் என்பதும் பெங்களூரு காமாட்சிப்பாளையத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் என்பதும் தெரியவந்தது. ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த தீரஜ், , ஏராளமான பணத்தை இழந்திருக்கிறான்.

ஆன்லைன் வர்த்தக முதலீடுகளுக்காக நண்பர்கள், உறவினர்கள், வங்கி என வாங்கிய கடன்கள் அனைத்தும் அவனை நெருக்கத் தொடங்கி இருக்கின்றன. இதனையடுத்து திருடுவது, கொள்ளையடிப்பதைத் தவிர வேறு வழியில்லை என முடிவு செய்த தீரஜ், தனியாகச் சென்று கொள்ளையடிப்பது எப்படி என யூடியூபில் வீடியோக்கள் பார்த்து பயிற்சி எடுத்திருக்கிறான்.

வங்கியில் கூட்டம் இல்லாத நேரத்தில் கொள்ளையடிக்க முடிவு செய்த தீரஜ், பொங்கல் விடுமுறையை சாதகமாக்கி, சம்பவத்தன்று வங்கியில் கொள்ளையடித்தது தெரியவந்தது. கொள்ளையடித்த 85 லட்ச ரூபாயில் மங்களூரு, ஷிமோகா, அனந்தபூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நண்பர்கள், உறவினர்களிடம் வாங்கிய சுமார் 40 லட்ச ரூபாய் கடன்களை அடைத்த தீரஜ், கடைசியாக காமாட்சிப்பாளையத்தைச் சேர்ந்த நண்பர்களிடம் வாங்கிய கடன்களை அடைக்க வந்தபோது, போலீசிடம் சிக்கியுள்ளான்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments