இனி குவார்ட்டருக்கு வாட்டர் மிக்ஸிங் வேணாமாம்ப்பா... திருட்டில் என்ன ஒரு புத்திசாலித்தனம்.!
மதுரையில் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் ஏற்றி செல்லும் சரக்கு வாகனத்தில் மதுபாட்டில்களின் சீலை லாவகமாக திறந்து மதுவை திருடிவிட்டு தண்ணீர் கலந்து வைத்த 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை சுற்றுவட்டார பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகின்ற, மதுபாட்டில்களில் லேபிள்கள் சரியாக ஒட்டப்படவில்லை என்றும் போலி மதுபானங்கள் வருவதாகவும் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் மது பாட்டில்களை குடோன்களில் இருந்து ஏற்றிச்செல்லும் வாகனங்களை கண்காணித்து வந்தனர்.
மதுரை கல்மேடு, களஞ்சியம் நகர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த மது ஏற்றிச்சென்ற வாகனத்தின் அருகே சென்று பார்த்த போது, சிறிது ஊசி போன்ற கருவியால் சீலை அகற்றி பாட்டில் மூடியை கழற்றி கால்வாசி மதுவை வேறு பாட்டிலில் ஊற்றிவிட்டு, அதற்கு பதிலாக தண்ணீரை ஊற்றி நிரப்பி வைத்துக் கொண்டு இருந்தனர்.
விசாரணையில் அந்த லோடு, மணலூர் TASMAC கிடங்கிலிருந்து விரகனூர் ஒயின்ஷாப் கடைகளுக்கு கொண்டு செல்லும் மது பாட்டில்கள் என்பது தெரியவந்தது.
கையும் களவுமாக சிக்கிய அவர்கள் மதுரை ஆண்டார் கொட்டாரத்தை சேர்ந்த அஜய்,
ஜெயஹிந்த்ப்புரம் ஆனந்த், சதீஷ்குமார், டேவிட்துரை என்பதும், இவர்கள் தினமும் இது போன்று லோடு ஏற்றி வந்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில வேனை நிறுத்தி மது பானங்களைத் திருடியதும் தெரியவந்தது.
தினமும் 20 லிட்டர் முதல் 30 லிட்டர் வரை மதுவை திருடி வீட்டிற்கு கொண்டு சென்று பாட்டில்களில் நிரப்பி இரவு நேரங்களில் கூடுதல் விலைக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments