கைய புடிச்சி இழுத்தியா ? கழுத்தில கைய போட்டியா..? ஆட்டத்தால் நின்ற திருமணம்..! குடும்பத்தில் கும்மியடித்த டி.ஜே

0 11221

பண்ருட்டியில் திருமண வரவேற்பில் டி.ஜெ நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட குத்துப்பாட்டிற்கு  நடனமாடிய உறவினர் ஒருவர், மணமகன் முன்பு மணப்பெண்ணின் கையை பிடித்தும், தோளில் கையைபோட்டும் ஆடியதால் திருமணமே நின்று போன சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஆட்டத்தால் ஆட்டம் கண்டு, கானல் நீரான சாப்ட்வெர் என்ஜினீயரின் மணவாழ்க்கை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பெரியகாட்டுபாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். சென்னையில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணிபுரிந்து வரும் இவருக்கும், குடுமியான் குப்பத்தை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவருக்கும் காடம்புலியூரில் உள்ள திருமண மண்டபத்தில் 19 ந்தேதி இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

மாப்பிள்ளையின் விருப்பத்துக்கு மாறாக வரவேற்பில், பெண் வீட்டார் டி.ஜே இசை நிகழ்ச்சி கட்டாயம் வைத்தே ஆகவேண்டும் என்று அடம் பிடித்து வைத்ததாக கூறப்படுகின்றது. டி.ஜே இசைத்த குத்து பாடல்களால் உற்சாகமடைந்த பெண் வீட்டார் எழுந்து ஆட ஆரம்பித்தனர்.

பெண்ணின் உறவுக்கார இளைஞர்கள் மணப்பெண்ணின் கையை பிடித்து சினிமா பாணியில் குழு நடனம் ஆடத்தொடங்கினர். ஏற்கனவே வெறுப்பாக இருந்த மாப்பிள்ளை ஸ்ரீதர் வேண்டா வெறுப்பாக ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டார்

அப்போது சிம்புவின் ஒஸ்தி படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றை டி.ஜே இசைக்க , மற்றொரு உறவினர் இன்னும் ஒரு படிமேலே சென்று மணப்பெண்ணின் கை பிடித்து இழுத்து ஆடத்தொடங்கினார்

மணமகனையும் பிடித்து இழுத்த அந்த நபர் தன்னை சினிமா ஹீரோ என்று நினைத்துக் கொண்டு மணமகன் மற்றும் மணமகளின் கழுத்தில் கையை போட்டு கொண்டு நடனம் ஆடியதால் கடும் ஆத்திரம் அடைந்த மாப்பிள்ளை, அவரை பிடித்து விலக்கிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

மணமகனின் ஆவேசத்தை கண்டு அதிருப்தி அடைந்த மணப்பெண் அங்கிருந்து விலகி ஓரமாக சென்றார். இத்தனை களேபாரங்களுக்கும் நடுவே சிலர் உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தனர்

இதற்கிடையே மணமகன் தன்னை தாக்கிவிட்டதாக கூறி திருமணத்தை நிறுத்திய மணமகள், இதற்கெல்லாம் சந்தேகம் கொள்ளும் ஸ்ரீதரை திருமணம் செய்து கொண்டால் தன்னால் நிம்மதியாக வாழ முடியாது என்று கூறி தனது உறவினர்களுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றதால் 20ந்தேதி காலையில் நடக்க இருந்த ஸ்ரீதரின் திருமணம் பாதியிலேயே நின்றது.

ஆனால் குடுமியான் குப்பத்துக்கு சென்ற பெண் வீட்டார் குடும்பத்தோடு அமர்ந்து ஆலோசித்து செஞ்சியில் உள்ள உறவுக்கார இளைஞரான கோபி என்பவரை பேசி முடித்து முடிவு செய்யப்பட்ட அதே முகூர்த்தத்தில் அந்தப்பெண்ணுக்கும், உறவுக்கார இளைஞருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

நிச்சயிக்கப்பட்ட மணமகனான ஸ்ரீதரை அம்போவென விட்டுச்சென்று வேறு இளைஞரை திருமணம் செய்ததோடில்லாமல் , தனக்கு திருமணமாகிவிட்டது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக தனது கணவனுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தையும் ஸ்ரீதருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வெறுப்பேற்றியதாக கூறப்படுகின்றது.

டி.ஜே நிகழ்ச்சியில் போட்ட ஆட்டத்தால் தனது திருமண வாழ்க்கையே காணல் நீராகி போன அதிர்ச்சியில் இருந்த ஸ்ரீதர், தான் அந்த பெண்ணை தாக்கவில்லை என்றும் பெண் வீட்டார், தன்னை 7 லட்சம் ரூபாய் வரையிலும் திருமண வரவேற்பு செலவு செய்ய வைத்து ஏமாற்றி விட்டதாக கூறி பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொண்ணு கைய புடிச்சி ஆட்டமாவாடா ஆடுறீங்கன்னு ? ஒரு கேள்வி கேட்டதற்காக திருமணத்தையே நிறுத்தி மாப்பிள்ளையை சிங்கிளா நிற்கவிட்டு சென்ற சம்பவம் மாப்பிள்ளை வீட்டாரிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments