பெரியார் சிலையை உரசி உடைத்த லாரி..! பின்னணியில் சதியா ? போலீசாரிடம் வாக்குவாதம்..!
புதுச்சேரியில் இருந்து மஹாராஷ்டிரா நோக்கிச் செல்ல வேண்டிய கண் டெய்னர் லாரி ஒன்று வழிதவறி விழுப்புரம் நகருக்குள் நுழைந்து , சாலையோரம் இருந்த பெரியார் சிலையை உரசி உடைத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசாரிடம் துப்பாக்கி கேட்டு அடம் பிடித்த பெரியார் தொண்டர்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
புதுச்சேரி மாநிலம், நெட்டப்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து, வாகன டயர்கள் ஏற்றிக்கொண்டு, மகாராஷ்டிர மாநிலம், புனேவிற்கு நோக்கி புறப்பட்ட கண்டெய்னர் லாரி ஒன்று பைபாஸ் சாலையில் செல்லாமல் நள்ளிரவு 1:30 மணி அளவில் வழிதவறி காமராஜர் சாலைவழியாக விழுப்புரம் நகருக்குள் புகுந்தது.
மிகவும் குறுகலான அந்த சாலையின் சந்திப்பு பகுதியில் லாரியை திருப்ப முயன்ற போது அந்த லாரியில் பக்கவாட்டு பகுதி உரசியதில் சாலையின் நடுவில் இருந்த பெரியார் சிலை பீடத்துடன் உடைந்து கீழே விழுந்தது.
இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது. உடைத்து விட்டு நிற்காமல் சென்ற லாரியை போலீசார் உடனடியாக மடக்கிப்பிடித்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அந்த லாரி ஓட்டுனரை கைது செய்தனர்.
இதனிடையே, பெரியார் சிலையை உடைக்கப்பட்டதைக் கண்டித்து, பெரியார் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் சதி செயல் இருப்பதாகவும், விதியைமீறி கண்டெய்னர் லாரியை ஊருக்குள் அனுமதித்தது ஏன் ?என்றும் கேட்டு போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்
ஒரு கட்டத்தில் காவல் நிலையத்துக்குள் புகுந்து விழுப்புரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பார்த்திபனிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது விபத்து வழக்கு, ஆதாரமாக சிசிடிவி காட்சி உள்ளது, இதில் சதி செயல் ஏதும் இல்லை என்று எடுத்துக்கூறி அவர்களை சமாதானம் செய்து அனுப்புவதற்குள் போலீசார் விழிபிதுங்கி போயினர்.
Comments