அணையா விளக்கு அமர்ஜவான் ஜோதி.. தேசிய போர் நினைவுச் சின்னத்தில் இணைப்பு..!
இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971ஆம் ஆண்டு நடந்த போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக 50 ஆண்டுகளுக்கு முன் ஏற்றப்பட்ட அணையா விளக்கு அமர் ஜவான் ஜோதி, தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் ராணுவ முறைப்படி இணைக்கப்பட்டது.
1971ஆம் ஆண்டு, பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றதோடு, இந்தியா உதவியுடன் வங்கதேசம் தனிநாடாக உருவெடுத்தது. இந்த போரில் இந்தியா தரப்பில் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்த நிலையில், அவர்கள் நினைவாக, இந்தியா கேட் பகுதியில் அமர் ஜவான் ஜோதி ஏற்றப்பட்டது.
1972ஆம் ஆண்டின் குடியரசுத் தினத்தன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அமர் ஜவான் ஜோதி எனும் தீச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அப்போதில் இருந்து இந்நாள் வரை அந்த விளக்கு அணையாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது.
சுமார் 50 ஆண்டுகளாக ஒளிர்ந்து வரும் அமர் ஜவான் ஜோதி தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் இணைக்கப்பட்டது. இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு சிலை அமைக்கப்படுவதால், அமர் ஜவான் ஜோதியானது ராணுவ முறைப்படி இடமாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் முப்படைகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். முதலில் அமர் ஜவான் ஜோதியில் இருந்து இசைவாத்தியங்கள் முழங்க பந்தத்தில் தீச்சுடர் ஏற்றப்பட்டது.பின்னர், இந்த தீச்சுடரானது வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் போர் நினைவுச் சின்னத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்குள்ள ஜோதியுடன் இணைக்கப்பட்டது. அப்போது, வீரர்கள் அனைவரும் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்விற்கு ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைவர் ஏர் மார்ஷல் பாலபத்ரா ராதா கிருஷ்ணா தலைமை தாங்கி இரு சுடர்களையும் இணைத்தார்.குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் அமர் ஜவான் ஜோதியில் முதல் மரியாதை செலுத்துவது மரபாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், இனி வரும் காலங்களில் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் தான் முதல் மரியாதை செலுத்தப்படும்.
Comments