முன்னாள் அமைச்சர் அன்பழகன் தொடர்புடைய 58 இடங்களில் சோதனை - கணக்கில் வராத 6 கிலோ தங்க நகைகள், ரூ.2.65 கோடி பறிமுதல்.!
வருமானத்திற்கு அதிகமாக சுமார் 11 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் சொத்து குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு துறை, 58 இடங்களில் சோதனை நடத்தியதாகவும், அதில் கணக்கில் வராத 2 கோடியே 65 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது...
கடந்த ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன், பதவியை முறைகேடாக பயன்படுத்தி, வருமானத்திற்கு அதிகமாக தனது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும், தெலுங்கானா மாநிலத்திலும் அன்பழகன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். கே.பி.அன்பழகனின் சொந்த மாவட்டமான தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
கேரகொடா அள்ளி பகுதியிலுள்ள கே.பி.அன்பழகன் வீடு, அவரது மகன்கள் சந்திரமோகன், சசிமோகன் ஆகியோரது வீடு, மகள் வித்யாவின் வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அன்பழகனுக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படும் பாப்பிரெட்டிபட்டி அதிமுக எம்.எல்.ஏ. கோவிந்தசாமி வீடு, கோவிந்தசாமியின் சகோதரர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
அதிமுக நகரச் செயலாளர் பூக்கடை ரவி மற்றும் கே.பி.அன்பழகனின் சித்தப்பா வீடு, அரூர், பாலக்கோடு, மாரண்ட அள்ளி பகுதிகளில் செயல்பட்டு வரும் அன்பழகனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது. ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அன்பழகன் வீட்டுக்கு முன் குவிந்த அதிமுகவினர் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, கே.பி.அன்பழகன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. 2016 சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுதாக்கலில், நகைகள், நிலங்கள், முதலீடுகள் என கே.பி.அன்பழகனின் மொத்த சொத்து மதிப்பு ஒரு கோடியே 60லட்சம் ரூபாயாக இருந்ததாகவும், ஆனால், 2021 தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவின் படி சொத்து மதிப்பு 23கோடியே 3லட்சம் ரூபாயாக 22 மடங்கு உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அன்பழகன் அமைச்சராக இருந்த ஐந்தாண்டு காலத்தில், அவரும், அவரது குடும்பத்தினரும் சம்பாதித்தாக கூறப்படும் வருமானம் 23கோடியே 59லட்சம் ரூபாய் என்ற நிலையில், இதில், 13கோடியே 32லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வரவு, செலவு கணக்கு காட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமானத்தை வைத்து கணக்கிட்டால், தற்போதைய சொத்து மதிப்பு 10 கோடியே 10 லட்சத்து 39 ஆயிரத்து 663 ரூபாயாக இருந்திருக்க வேண்டும். அதன் படி, சேமிப்பு, செலவினங்கள் போக சுமார் 11கோடியே 32லட்சம் ரூபாய்க்கு கணக்கில் வராமல் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு வரை பூஜ்ஜியம் வருமானம் என்றும்,13 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவு என வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மைத்துனர் பெயரில் எம் சாண்ட் நிறுவனம், அங்குராஜ் என்பவர் பெயரில் புளூ மெட்டல்ஸ் நிறுவனம் செயல்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை கோபாலபுரத்தில் அன்பழகனின் தங்கை பெயரில் கிரானைட் நிறுவனம் நடத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் பல கோடி ரூபாய் சொத்துக்கள் குவித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை சோதனைக்கு ஆளான 6வது முன்னாள் அதிமுக அமைச்சர் கே.பி.அன்பழகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மொத்தம் 58 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 2 கோடியே 65 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.
6.637 கிலோ தங்க நகைகள், 13.85 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும்
வங்கி பெட்டக சாவி, வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை அறிவித்துள்ளது.
Comments