தங்களுக்கு கூடுதல் வரி விதிக்குமாறு உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் கோரிக்கை.!
கொரோனா மற்றும் வறுமையால் உலகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு கூடுதல் வரி விதிக்குமாறு, 100-க்கும் மேற்பட்ட உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் தாங்களாக முன்வந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் உலக பொருளாதார அமைப்பின் டாவோஸ் மாநாட்டிற்கு ஆன்லைன் மூலம் அனுப்பிய பகிரங்க கடிதத்தில், இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
தற்போதைய வரிவிதிப்பு முறை நியாயமானதாக இல்லை என்றும், அது பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக ஆக்கும் வகையில் உள்ளதாகவும், பணக்காரர்களிடம் அவர்களுக்கு உரிய வரி பங்களிப்பை செலுத்தும் வகையில், உலகில் உள்ள அத்தனை நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உலகின் பெரும் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிப்பதன் மூலம், ஆண்டுக்கு இரண்டரை ட்ரில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 187 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் என்றும், இத்தொகையை கொண்டு உலக மக்கள்அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த முடியும் என்றும், 230 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்க முடியும் என்றும், பணக்கார தனிநபர்கள் மற்றும் லாப நோக்கற்றவர்களுக்கான அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், புகழ்பெற்ற டிஸ்னி குழுமத்தின் வாரிசான அபிகெய்ல் டிஸ்னி உட்பட அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரியா, நெதர்லாந்து, டென்மார்க், நார்வே, இரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 102 பெரும் பணக்காரர்கள், தங்களுக்கு கூடுதல் வரி விதிக்குமாறு கோரிக்கை விடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments